துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் தென் மண்டலம் – வடக்கு மண்டலம் அணிகள் இடையிலான போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வடக்கு மண்டலம் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கம்ரான் இக்பால் 76 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து பேட் செய்த தென் மண்டலம் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்தது.
கேப்டன் திலக் வர்மா 1, நாராயணன் ஜெகதீசன் 34 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தென் மண்டல அணி நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. நாராயணன் ஜெகதீசன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் சமரன் 27, ஹிமதேஜா 0 ரன்களில் நடையை கட்டினர்.
6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்ரேயஸ் கோபால், திலக் வர்மாவுடன் இணைந்து சீராக ரன்கள் சேர்த்தார். நிதானமாக பேட் செய்த திலக் வர்மா 219 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். அவர், தனது முதல் பவுண்டரியை 154-வது பந்தில்தான் அடித்திருந்தார். ஸ்ரேயஸ் கோபால் 169 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 175 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய தனய் தியாகராஜன் 6, வித்வத் கவேரப்பா 0, நிதீஷ் 0 ரன்களில் வெளியேறினர். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தென் மண்டல அணி 94 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 106, கவுரி சாய்தேஜா ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
குர்னூர் பிரார் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். கைவசம் ஒரு விக்கெட் இருக்க 90 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் மண்டல அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
