மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய சாய் சுதர்சன் அரை சதம் அடித்தார்.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. 17.3 ஓவர்களில் 58 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. கே.எல்.ராகுல் 54 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஜோமல் வாரிக்கனின் சுழற்பந்து வீச்சை கிரீஸை விட்டு வெளியே வந்து விளையாட முயன்றபோது டெவின் இம்லாக்கால் ஸ்டெம்பிங்க் செய்யப்பட்டார்.
இதையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 145 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் தனது 7-வது சதத்தை விளாசினார். சாய் சுதர்சன் 87 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் தனது 2-வது அரை சதத்தை கடந்தார். நிதானமாக விளையாடி வந்த சாய் சுதர்சன் 165 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் ஜோமல் வாரிக்கன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஜோடி 193 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ஷுப்மன் கில் களமிறங்கினார்.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 253 பந்துகளில், 22 பவுண்டரிகளுடன் 173 ரன்களும், ஷுப்மன் கில் 68 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க இந்திய அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
மீண்டு வந்தது எப்படி? – டெல்லி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்துக்கு பின்னர் இந்திய அணியின் பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் கூறும்போது, “நான் அழுத்தத்தைப் பற்றியோ அல்லது ஆட்டத்தின் நிலையை பற்றியோ யோசிக்கவில்லை. இந்தியா ‘ஏ‘ தொடரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகுதான் இந்த தொடரில் விளையாடுகிறேன். அதனால் சிறப்பாக விளையாடுவதில் மட்டுமே என் கவனம் இருந்தது. வேறு எதையும் பற்றி யோசிக்காமல், முடிந்தவரை அமைதியாக இருக்கவும், கடினமான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் முயற்சித்தேன்.
இது எனக்கு மிகவும் அமைதியான இன்னிங்ஸ். போட்டிக்கு முன்னதாக, நான் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு, விஷயங்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக இயல்பாக நடக்க விட முடிவு செய்திருந்தேன். அதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்த முக்கிய எண்ணம்.
மேலும், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பேட்டிங் செய்வது அருமையாக இருந்தது, நல்ல பந்துகளில் கூட அவர் பவுண்டரிகளை அடிக்கும் விதம் மறுமுனையில் இருந்து பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் ஒரு முறை மட்டுமே பேட்டிங் செய்ய விரும்புகிறோம். முடிந்தவரை நீண்ட நேரம் பேட்டிங் செய்து சிறந்த ஸ்கோரைப் பெற விரும்புகிறோம். எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை மனதில் இல்லை, ஆனால் மேற்கிந்திய தீவுகளை இரண்டு முறை பேட்டிங் செய்ய வைப்பதே குறிக்கோள்’’ என்றார்.
5-வது முறையாக 150+: டெல்லி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான 23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் அவர், 7 சதங்களை அடித்துள்ளார். இதில் 5 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்த வகையில் 24 வயதை எட்டுவதற்கு முன்னர் 150+ ரன்களை அதிக முறை குவித்த வீரர் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் மட்டுமே. அவர், 24 வயதை எட்டுவதற்கு முன்னதாக 8 முறை 150+ ரன்களை வேட்டையாடி இருந்தார்.
கடைசியில் தேக்கம்: இந்திய அணி முதல் முதல் செஷனில் 28 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 94 ரன்கள் சேர்த்தது. 2-வது செஷனில் 30 ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுக்காமல் 126 ரன்கள் குவித்தது. ஆனால் 3-வது செஷனில் 32 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்தது. இறுதி செஷனில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்கள் ஓரளவு ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.