இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

0
19

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று நிஷின் நகரில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. ஆசிய விளையாட்டு போட்டியில் ஓர் அணி குவித்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது.

தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 79 ரன்களும், ஷபாலி வர்மா 29 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10 ஓவர்களில் 99 ரன்கள் குவித்து மிரட்டியது.

இடதுகை சுழற்பந்து வீச்சாளரான சுகந்திகா குமாரி வீசிய 3-வது ஓவரில் மந்தனா தொடர்ச்சியாக 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். மிதாலி அயோத்யா வீசிய அடுத்த ஓவரில் மந்தனா, எக்ஸ்டிரா கவர் திசையில் சிக்ஸர் விளாசினார். சமாரி அதப்பட்டு வீசிய 5-வது ஓவரில் ஷபாலி வர்மா சிக்ஸர்களை பறக்கவிட, மந்தனா தனது பங்குக்கு ஒரு சிக்ஸரை மைதானத்துக்கு வெளியே அனுப்பி அசத்தினார்.

இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றிய ரிச்சா கோஷ் 22 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் விளாசினார். முன்னதாக ஹர்மன்பிரீத் கவுர் 17 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பார்தி ஃபுல்மாலி 7 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் சுகந்திகா குமாரி, கவிஷா தில்ஹாரி, சாமுதி பிரபோதா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 217 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை மகளிர் அணி, இந்திய சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக கேப்டன் சமாரி அதப்பட்டு 29, கவுஷினி நுத்யங்கனா 14, கவிஷா தில்ஹாரி 11 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்டர்களும் இரட்டை இலக்கை ரன்னை எட்வில்லை. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஷபாலி வர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல், சரணி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் கைப்பற்றுவது இது 2-வது முறையாகும். கடந்த 2022-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது. மேலும் நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கமாகவும் இது அமைந்தது.

தமிழகத்தின் கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை கமலினிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தின் மதுரையை சேர்ந்த வீராங்கனை கமலினிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் மகத்தான சாதனையை பாராட்டி, தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சம் வழங்கப்படும். இவரை போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழக அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். கமலினியின் இந்த வெற்றி, தமிழக இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஹாக்கியில் இந்தியா வெற்றி: ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று இலங்கையுடன் மோதியது. இதில் இந்திய அணி 16-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜுக்ராஜ் சிங் 4 கோல்களும் (10, 22, 42 மற்றும் 53-வது நிமிடங்கள்), அபிஷேக் 3 கோல்களும் (11, 17 மற்றும் 49-வது நிமிடங்கள்), தில்பிரீத் சிங் 3 கோல்களும் (30, 38, 55-வது நிமிடங்கள்), கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களும் (16, 45-வது நிமிடங்கள்) அடித்தனர்.

மன்தீப் சிங் (5-வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (29-வது நிமிடம்), மன்பிரீத் சிங் (31-வது நிமிடம்), விவேக் சாகர் பிரசாத் (36-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியிருந்தது.

கால் இறுதியில் மீனா: சாஃப்ட் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜே மீனா 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானின் அரைன் ஹுசைனை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

வுஷுவில் பதக்கம் உறுதி: வுஷு போட்டியில் மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவி நவுரம், மக்காவின் சூ மன் சினை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இதன் வாயிலாக குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளார்.

இறுதிப் போட்டியில் பிரணதி நாயக்: ஜிம்னாஸ்டிக்ஸில் இந்தியாவின் பிரணதி நாயக் வால்ட் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தகுதி சுற்றில் 19 பேர் கலந்துகொண்ட நிலையில் பிரணதி நாயக் 12.916 புள்ளிகளை பெற்று 7-வது இடம் பிடித்தார்.

துப்பாக்கி சுடுதலில் ஏமாற்றம்: துப்பாக்கி சுடுதலில் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன், பார்த் மானே ஜோடி 634.6 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப் போட்டியில் இளவேனில் வாளறிவன், பார்த் மானே ஜோடி தடுமாறியது. இந்த ஜோடி 376.3 புள்ளிகளை மட்டுமே பெற்று 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது.

கால் இறுதியில் இந்திய அணி தோல்வி: மகளிருக்கான டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியா 0-3 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி அடைந்தது. ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 0-3 என்ற கணக்கில் கொரியாவிடம் வீழ்ந்தது.

குத்துச்சண்டையில் சாக்‌ஷி சவுத்ரி அசத்தல்: மகளிருக்கான குத்துச்சண்டையில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சாக்‌ஷி சவுத்ரி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிலிப்பைன்ஸின் ஐரா வில்லேகாஸுடன் மோதினார். இதில் சாக்‌ஷி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆடவருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜதுமணி சிங் 5-0 என்ற கணக்கில் நேபாளத்தின் சந்திர பகதூர் தாபாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கால்பதித்தார்.

கபடியில் இந்தியாவுக்கு 2-வது வெற்றி: ஆடவருக்கான கபடியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியான இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று தென் கொரியாவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 63-31 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய ஆடவர் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 49-24 என்ற கணக்கில் ஜப்பானை வென்றிருந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று (23-ம் தேதி) வங்கதேசத்துடன் மோதுகிறது.

வாள்வீச்சில் சச்சின் அசத்தல்: வாள்வீச்சில் ஆடவருக்கான தனிநபர் ஃபாயில் பிரிவில் ஹேமஷ் சனாசம் 5 ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான சச்சினும் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் நுழைந்தார்.

கராத்தேவில் கைநழுவிய பதக்கம்: கராத்தேவில் ஆடவருக்கான குமித்தே 84 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சேத்தன் பாத், சீன தைபேவின் மெங் யு சுங்குடன் மோதினார். இருவரும் தலா ஒரு யுகோ புள்ளியைப் பெற்றனர். இதனால் போட்டி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. எனினும், மெங் யு சுங் முதலில் புள்ளியை பெற்றார். இதன் அடிப்படையில் ‘சென்ஷு’ விதியைப் பயன்படுத்தி சுங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கராத்தேவில், எதிராளிக்கு முன்னதாகவே முதல் புள்ளியைப் பெறும் விளையாட்டு வீரருக்கு ‘சென்ஷு’ வழங்கப்படுகிறது. போட்டி சமநிலையில் முடிவடையும்போது இது வெற்றியாளரைத் தீர்மானிக்கும். இந்த வகையிலேயே மெங்-யு சுங் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

செபக்டக்ராவில் இந்திய அணி தோல்வி: செபக்டக்ராவில் ஆடவருக்கான ரெகு பிரிவில் இந்தியா 0-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி அடைந்தது. முதல் ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கணக்கிலும், 2-வது ஆட்டத் தில் 0-2 என்ற கணக்கிலும், கடைசி ஆட்டத்தில் 0-2 என்ற கணக்கிலும் வீழ்ந்தது. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் 1-2 என்ற கணக்கில் ஜப் பானிடம் வீழ்ந்திருந்தது. கடைசி ஆட்டத்தில் இந்திய அணி, பிலிப்பைன்ஸுடன் மோதுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here