பிரேசிலின் ஜாய்ன்வில்லி பகுதியில் வசிக்கும் ஆன்மிகப் பற்றுள்ள தம்பதிக்கு உள்ளூர் பாஸ்டர் ஒருவர் மூலம் அமண்டா மரியா சவுசா டி ஒலிவேரா என்ற 37 வயது பெண் அறிமுகமாகியுள்ளார்.
ஒலிவேரா என்ற தனது இயற்பெயரை கேப்ரியல் என்று மாற்றிக் கூறியதுடன், 12 வயதான தனக்குக் கடுமையான ஆட்டிசம் பாதிப்பு உள்ளது, என்றும் நாடகமாடியுள்ளார். அதை நம்பிய தம்பதி இரக்கப்பட்டு அவரை தத்தெடுத்து தங்களது வீட்டில் தங்க வைத்துள்ளனர். அவரது உடல் எடையைக் குறைப்பதற்கான மருத்துவச் செலவையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஒலிவேராவின் பின்னணி குறித்துச் சந்தேகமடைந்த அவரது வளர்ப்பு அத்தை, இணையத்தில் தேடியபோது 3 ஆண்டுகளுக்கு முன்பு ரியோ டி ஜெனிரோவில் இதேபோன்ற ஒரு மோசடியில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஒலிவேரா கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது ஒலிவேராவின் வழக்கறிஞர் லூசியோ சவுசா நீதிமன்றத்தில் வாதிடுகையில், “கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீடற்றவராக வாழ்ந்து வந்த ஒலிவேரா, தனது வாழ்வாதாரத்துக்காகவே இந்தப் பொய்யான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். அவர் நிதி ஆதாயம் அடையவோ அல்லது திருட்டிலோ ஈடுபடவில்லை” எனத் தெரிவித்தார்.
ஆனால், வழக்கறிஞரின் வாதத்தை நிராகரித்த பிரேசிலின் சாந்தா கதரீனா நீதிமன்றம், ஒலிவேரா திட்டமிட்டும், முழு சுயநினைவுடனும் தான் இந்த மோசடியைச் செய்துள்ளார் எனக் கூறி அவருக்கு 1 ஆண்டு 6 மாதம் 10 நாட்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
