நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160-ஐ தாண்டியுள்ளது. மேலும், 700-க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பியதாகவும், மற்ற 37 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் வரலாறு காணாத வகையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மலைச்சரிவுகளில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்ளநீர் கிராமங்கள், பாலங்கள் மற்றும் முக்கிய நீர்மின் திட்டங்களை அடித்துச் சென்று பேரழிவை ஏற்படுத்தியது. ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள் நொடிப் பொழுதில் வெள்ளத்தில் சரிந்து விழுந்தன. பெரும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதுதொடர்பான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160-ஐ தாண்டியுள்ளது. மேலும், 700-க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பியதாகவும், மற்ற 37 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
468 சுற்றுலா பயணிகளை காணவில்லை!
நேபாள சுற்றுலாத் துறை செய்தித் தொடர்பாளர் சுராஜ் கிமிரே கூறுகையில், “கிட்டத்தட்ட 468 சுற்றுலாப் பயணிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்களில் 75 பேர் நேபாளிகள். 393 பேர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்.” என்றார்.
அவசர தொலைபேசி எண்கள்:
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. தொலைபேசி / வாட்ஸ்அப்: +977 985 131 6807 | +977 970 910 7500 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு விவரங்கள், உதவிகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 92895 16712 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
கேரள அரசு 1800 425 3939 (கட்டணமில்லா எண்), +91 88020 12345 (வெளிநாடுகளில் இருந்து மிஸ்டு கால் கொடுக்க) அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
கர்நாடாக மாநில வருவாய் துறை, 1070 / 080-22253707 எண்களையும், seockarnataka@gmail.com என்ற இமெயில் முகவரியையும் அறிவித்துள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரம்:
வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட வழியெங்கிலும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், வெள்ளப் பெருக்கினால் ராட்சத பாறைகளும், சேறும் சகதியும் மிகுந்து கிடப்பதால் மீட்புப் பணிகள் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது ஆங்காங்கே பதிவான சிசிடிவி காட்சிகள், சிலர் எடுத்த வீடியோக்கள் ஆதாரத்தின்படி உயிரிழப்புகள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று அதிகார்கள் கூறுகின்றனர்.
வீடுகள், சாலைகள், பாலங்கள், நீர்மின் நிலையத் திட்ட கட்டமைப்புகள் இந்த வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
