Home மாநில செய்திகள் தனி சின்னத்தில் போட்டியிட முஸ்லிம் கட்சிகள் தயங்கியதும் தயாராவதும் ஏன்?

தனி சின்னத்தில் போட்டியிட முஸ்லிம் கட்சிகள் தயங்கியதும் தயாராவதும் ஏன்?

0

“இனி வரும் தேர்தல்களில் தனி சின்னத்திலேயே போட்டியிடுவோம்” என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, தனி சின்னத்தில் வென்ற முஸ்லிம் லீக் கட்சிக்கு தவெக அரசில் அமைச்சர் பதவி கிடைத்திருப்பதால் மமக இந்த முடிவுக்கு வந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை மறுத்த ஜவாஹிருல்லா, “பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியானது தனி சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே அதன் பதிவை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்துவதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்” என்று சொன்னார்.

இவர் இப்படிச் சொன்னாலும் இதுகுறித்தான விவாதங்கள் முஸ்லிம் இயக்கங்களில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய மமக முன்னாள் நிர்வாகிகள் சிலர், “2021 சட்டமன்றத் தேர்தலில், ஒரு தொகுதியில் உதயசூரியனில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மமக-வுக்கு 2 தொகுதிகளை தந்தது திமுக. முதலில் இதற்கு சம்மதித்த ஜவாஹிருல்லா, அந்த ஒரு தொகுதியில் கத்தரிக்கோல் சின்னத்தில் போட்டியிடவும் தயாரானார். ஆனால், கடைசி நேரத்தில், தானும் உதயசூரியனிலேயே போட்டியிடுவதாகச் சொல்லிவிட்டார்.

அதேபோல், ‘2026-ல் உதயசூரியனில் தான் போட்டியிடுவோம்’ என முந்திக் கொண்டு அறிவித்ததும் ஜவாஹிருல்லா தான். அப்போது முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்க சம்மதித்த திமுக, மூன்றிலும் சூரியனில் தான் நிற்க வேண்டும் எனச் சொன்னது. இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. அதனால், அந்தக் கட்சிக்கு 2 தொகுதிகள் முடிவானது. ‘எங்களுக்கு 3 சீட் இல்லை, தராவிட்டால் நாங்கள் வெளியேறுகிறோம்’ என்று சொல்லி இருந்தால் திமுக 3 தொகுதிகளைத் தந்திருக்கும். இவர்கள் அனைவருமே சூரியனும் இலையும் தான் ‘சேஃப்’ என நினைப்பதே இதற்கெல்லாம் காரணம்.

இப்போது தவெக தரப்பில் இருந்து முஸ்லிம் லீக் கட்சியிடம் ஆதரவு கேட்டபோது, ‘எங்கள் கூட்டணிக்குத் தலைவர் ஸ்டாலின் தான்’ என்று சொல்லி அழைப்பை நிராகரித்தார் காதர் மொகிதீன். அதன் பிறகு கேரளாவில் இருந்து வந்த அழுத்தத்துக்குப் பிறகே தவெக-வுக்கு ஆதரவு கொடுக்கும் முடிவை எடுத்தார். அதையும் ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுத்தான் செய்தார். அந்தளவுக்கு திமுக-வின் சிறுபான்மை பிரிவு போலவே செயல்பட்டு வந்த அவரை இன்றைக்கு திமுக-வினர் எந்தளவுக்கு கொச்சைப்படுத்துகிறார்கள் பாருங்கள்.

முஸ்லிம் லீக் கட்சிக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்ட பிறகு நடந்த மமக மேல்மட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில், ‘தனி சின்னத்தில் நின்றிருந்தால் நமக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்குமே’ என்ற விவாதமும் வருகிறது. ‘வருங்காலத்தில் அதுபற்றி யோசிப்போம்’ என்று சொல்லாமல், ‘இனிமேல் தனி சின்னத்தில் தான் போட்டி’ என தீர்மானம் நிறைவேற்றி அதை மீடியாவுக்கும் பிரதானச் செய்தியாகச் சொல்கிறார் ஜவாஹிருல்லா. தனி சின்னத்தில் போட்டியிட்டால் தான் கட்சியின் பதிவு நிலைக்கும் என்று இந்தத் தேர்தலுக்கு முன்பே அவருக்குத் தெரியாதா?

2011-ல் அதிமுக கூட்டணியில் மமக இருந்தது. அப்போது 2 சீட் கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், ராஜ்ய சபா தேர்தலில் உபரியாக இருந்த 2 வாக்குகளை கனிமொழிக்கு போட்டோம் என்பதால் 2016-ல் மமக-வை கூட்டணியில் சேர்க்கவில்லை ஜெயலலிதா. அதனால் திமுக-விடம் போனோம். ‘கடைசி வரைக்கும் நீங்கள் அந்தம்மாவை தானே புகழ்ந்தீங்க’ என்று முகத்துக்கு நேராகவே கேட்டார் ஸ்டாலின்.

அப்போது முஸ்லிம் லீக்கிற்கு 5 சீட் தர சம்மதித்த ஸ்டாலின் எங்களுக்கு, 3 தான் என்றார். நாங்கள் 10 சீட் கேட்டோம். அது நடக்காது என்று தெரிந்ததும், ‘எங்களுக்கு சீட்டே வேண்டாம். நாங்கள் திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்’ என்று சொன்னோம். அதற்கும், சரி என்றார்.

கடைசி முயற்சியாக, கலைஞரைச் சந்தித்தோம். அங்கேயும் துரைமுருகன் குறுக்கே வந்தார். ‘அண்ணே நீங்க பேசாதீங்க… தலைவரை பார்க்க வந்துவிட்டு நாங்கள் வெறும் கையோடு போனதாகச் சரித்திரம் இல்லை’ என்று சொன்னோம். அவர் அமைதியாகிவிட்டார்.

கலைஞர் எங்களுக்கு 5 சீட்டை உறுதி செய்தார். ஆனால், தொகுதிகளை ஒதுக்கும்போது ஸ்டாலினும் துரைமுருகனும் உட்கார்ந்து கொண்டு, ஏற்கெனவே நாங்கள் வென்ற 2 தொகுதிகளை தந்துவிட்டு மற்ற 3 தொகுதிகளை அவர்கள் இஷ்டம் போல் தந்தார்கள். அதில், விஜயகாந்த் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியும் ஒன்று. அங்கே முஸ்லிம்கள் மொத்தமே 10 ஆயிரம் பேர் தான் இருப்பார்கள்.

அதனால், கடைசி நேரத்தில் அந்தத் தொகுதியை திமுக-விடமே திருப்பிக் கொடுத்துவிட்டோம். ஆக, இனியாவது முஸ்லிம் இயக்கங்கள் கூட்டணி தலைமையிடம் உரிய அழுத்தம் கொடுத்து தங்களுக்கான உரிமையை கேட்டுப் பெறவேண்டும்” என்றனர். இவர்களின் ஆதங்கம் ஒருபுறமிருக்க, “முஸ்லிம் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் திமுக-வில் இருக்கும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்த மறந்தே போய்விடுகிறது திமுக தலைமை” என்ற புலம்பல்களும் கொஞ்சம் சத்தமாகவே கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version