புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை? – கணக்குகளுடன் காத்திருக்கும் காங்கிரஸ், திமுக கட்சிகள்

0
11

புதுச்சேரியில், இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் திமுக – காங்கிரஸ் இடையே இப்போதே போட்டி கடுமையாகி வருகிறது.

இந்த முறை தங்கள் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என புதுச்சேரி திமுகவினர் விரும்புகின்றனர். ஆனால், இழந்த செல்வாக்கை மீட்டு ‘புதுவை எங்களின் கோட்டை’ என நிரூபிக்க காய் நகர்த்துகிறது காங்கிரஸ். இப்படி ஆளுக்கொரு திட்டம் வைத்திருப்பதால் இரண்டு கட்சிகளுமே முப்பதுக்கு இருபது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தங்களின் தலைமைக்கு தூபம் போடுகின்றன.

காங்கிரஸுக்கு நிகரான பலத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, மாற்றுக் கட்சிகளில் இருந்து வரும் முக்கிய தலைவர்களை தன் பக்கம் ஈர்த்து வரும் திமுக, கட்சி சாரா முக்கிய பிரபலங்கள் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், காங்கிரஸ் தரப்பிலோ இப்படியான முன்னெடுப்புகளில் ஆர்வம் காட்டாமல் 20 தொகுதிகளில் போட்டி என்பதில் மட்டுமே குறியாய் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அண்மையில் புதுச்சேரி வந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே ஆகியோர் காங்கிரஸின் இரண்டாம் கட்டத் தலைவர்களைச் சந்தித்து தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய நிர்வாகிகள், காங்கிரஸுக்கு சாதகமான 20 தொகுதிகளின் பட்டியலையும் அளித்துள்ளனர். இந்தப் பட்டியலில் கடந்த முறை திமுக, விசிக போட்டியிட்ட தொகுதிகளும் இருப்பது தான் இண்டியா கூட்டணிக்குள் தற்போது இடியை கூடுதலாக்கி இருக்கிறது.

கடந்த முறை காலாப்பட்டு, ராஜ்பவன், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு, திருபுவனை, காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. உழவர்கரை தொகுதியில் விசிக போட்டியிட்டது. இந்தத் தொகுதிகளை எல்லாம் தற்போது காங்கிரஸ் தனது விருப்பப் பட்டியலில் சேர்த்திருக்கிறது. இதில் காரைக்கால் தெற்கில் கடந்த முறை, மாவட்ட திமுக அமைப்பாளர் நாஜிம் வெற்றிபெற்று எம்எல்ஏ-வாக இருக்கிறார். அந்தத் தொகுதியையும் காங்கிரஸ் கேட்பது தான் திமுகவுக்கு திகைப்பை உண்டாக்கி இருக்கிறது.

இதுபற்றி யாராவது நியாயம் கேட்டால், “கடந்த 2021 தேர்தலில் வில்லியனுார், பாகூர், நெல்லித்தோப்பு, காலாப்பட்டு தொகுதிகளை திமுகவுக்கு நாங்கள் விட்டுக் கொடுத்தோமே” என்று எதிர் நியாயம் பேசுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். ஆக, தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளில் போட்டியிட்டால் நிச்சயம் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கணிப்பாக உள்ளது.

இந்தத் திட்டம் யாருக்கு சாத்தியமாகிறதோ அந்தக் கட்சிதான் புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு தலைமை ஏற்கமுடியும். அதேசமயம், மாநிலத் தலைமையில் இருப்பவர்கள் என்னதான் மல்லுக்கட்டி மனுக் கொடுத்தாலும் ஸ்டாலினும் ராகுலும் என்ன நினைக்கிறார்களோ அதுதான் இறுதி முடிவாக இருக்கும். இந்த விஷயம் சந்தேகத்துக்கு இடமின்றி தெரிந்தாலும் ‘ஊதுற சங்கை ஊதி வைப்போம்’ என்ற கணக்காய் இரண்டு கட்சிகளும் உரிமை நாதம் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here