ட்ரம்ப்பின் ‘போர்டு ஆஃப் பீஸ்’ அமைப்பில் இணையும் நாடுகள் எவை?

0
86

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ எனும் புதிய அமைப்பில் இணையும் நாடுகள் மற்றும் இணைய மறுப்பு தெரிவித்த நாடுகளின் விவரங்களை பார்ப்போம்.

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காசா நகரை மறுசீரமைப்பு செய்ய ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமைத்துள்ளார். இதன் தலைவராக அவரே பொறுப்பேற்றுள்ளார். இந்த ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ என்ற புதிய சர்வதேச அமைப்பில் இணைய இந்தியா, ரஷ்யா உட்பட 60 நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் மாளிகை தரப்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு ஆட்சித் திறன் மேம்பாடு, பிராந்திய உறவுகள், புனரமைப்பு, முதலீடுகளை ஈர்ப்பது, பெரிய அளவிலான நிதி மற்றும் மூலதனத் திரட்டல் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் என்று வெள்ளை மாளிகை கூறியது.

இந்த ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ அமைப்பு, உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதற்கு ஒரு துணிச்சலான புதிய அணுகுமுறையை மேற்கொள்ளும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்த அமைப்புக்கு ட்ரம்ப் தலைவராக உள்ளார். இந்த அமைப்பில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, ட்ரம்பின் சிறப்புப் பேச்சுவார்த்தையாளர் ஸ்டீவ் விட்காஃப், ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்க கோடீஸ்வரர் மார்க் ரோவன், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ராபர்ட் கேப்ரியல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ட்ரம்ப்பின் அழைப்பை சில நாடுகள் ஏற்றுக் கொண்டாலும், மற்ற பல நாடுகள் தூதரகக் கொள்கை காரணங்களைக் கூறி பங்கேற்க மறுத்துவிட்டன. ‘போர்டு ஆஃப் பீஸ்’ அமைப்பில் சேருமாறு சுமார் 60 நாடுகளின் தலைவர்களுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார்.

அழைக்கப்பட்ட முக்கியத் தலைவர்களில் பட்டியல்:

  • அல்பேனியப் பிரதமர் எடி ராமா
  • அர்ஜென்டினா அதிபர் ஹாவியர் மிலேய்
  • பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா
  • கனடா பிரதமர் மார்க் கார்னி
  • சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலைட்ஸ்
  • எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி
  • ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன்
  • இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி
  • ஜோர்டான் மன்னர் அப்துல்லா II
  • ருமேனியா அதிபர் நிகுசோர் டான்
  • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
  • துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன்
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
  • உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
  • பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்
  • ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
  • மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
  • சீன அதிபர் ஜி ஜின்பிங்
  • பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

ட்ரம்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டவர்கள், நிராகரித்தவர்கள் பட்டியல்:

இந்த அமைப்பில் ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன் இணைந்துள்ளார். அதேபோல், இந்த அமைப்புக்கு ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டினா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மொராக்கோ, வியட்நாம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கனடா இந்த அமைப்பில் சேரும் என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால், நிரந்தர உறுப்பினர் பதவிக்கான 1 பில்லியன் டாலர் கட்டணத்தைச் செலுத்தாது என்று தெளிவாகக் கூறியது. ரஷ்யாவின் பங்கேற்பு குறித்து உக்ரைனும், பிரிட்டனும் கவலை தெரிவித்துள்ளன.

சீனாவும், இந்தியாவும் தங்கள் பங்கேற்பு குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. இந்த அமைப்பு சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்று கூறி, சமாதான வாரியத்தில் சேர்வதற்கான திட்டத்தை நார்வே நிராகரித்தது. அதேபோல பிரான்ஸும் இந்த அமைப்பில் சேர மறுத்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here