ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன என்பதை பார்ப்போம். புதன்கிழமை அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 244 ரன்கள் இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிகரமாக எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை வான்கடேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. 244 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விரட்டியது. அந்த அணியின் ஓப்பனர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். வான்கடேவில் சிக்ஸர்கள் விளாசி வாணவேடிக்கை காட்டினர்.
அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 76 ரன்கள் எட்டினார். ஒருகட்டத்தில் 133 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது அந்த அணி. இருப்பினும் 4-வது பேட்ஸ்மேனாக வந்த கிளாசன் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நிதிஷ் குமார் ரெட்டி 21, சலீல் அரோரா 30 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர். 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
டி20 கிரிக்கெட் பாணி மாறி வருகிறது. முதல் ஆறு ஓவர்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் பந்தை துவம்சம் செய்கிறார்கள். “எத்தனை சிக்ஸ்? எத்தனை ஃபோர்?” யார் விளாசுகிறார்கள் என்று பார்ப்போம் என்பது போல தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டம் உள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் போன்ற தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டம் இப்படித்தான் உள்ளது. அதனால் எவ்வளவு பெரிய இலக்கையும் சேஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன?
>நடப்பு சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 265 ரன் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச இலக்காக இது உள்ளது.
>கடந்த 2024 சீசனில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 262 ரன் இலக்கை எட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
>கடந்த சீசனில் ஹைதராபாத் நகரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 246 ரன்களை எட்டி அசத்தியது சன்ரைசர்ஸ் அணி.
>நடப்பு சீசனில் மும்பை வான்கடேவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக 244 ரன்களை வெற்றிகரமாக எட்டியது சன்ரைசர்ஸ் அணி.
>நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 229 ரன்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.















