தமிழக சிறைகளில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? – ஐகோர்ட் கேள்வி

0
31

தமிழக சிறைகளில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய ஊழல் முறைகேடு குறித்தும், அதில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வரும் டிச.16-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர், சிறையில் வேலை செய்ததற்கு வழங்க வேண்டிய ஊதியத்தை 4 மாதங்களாக வழங்கவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞரான பி.புகழேந்தி, தமிழகத்தில் உள்ள 3 மத்திய சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் அதிகாரிகள் ரூ. 14.25 கோடி வரை முறைகேடு செய்துள்ளதாக தணிக்கை துறை அறிவித்துள்ளதாக வெளிவந்த பத்திரிகை செய்தியை நீதிபதிகளிடம் காண்பித்தார். மேலும், மனுதாரரின் கணவருக்கு கடந்த 4 மாதமாக ஊதியம் தரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 3 முக்கிய சிறைகளில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.

அப்போது அரசு தரப்பில், தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் நடந்துள்ளதாக கூறப்படும் இந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையும், துறை ரீதியிலான விசாரணையும் நடந்து வருகிறது, என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘ தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சிறைத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வரும் டிச.16-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர்.

மேலும், சிறைக்குள் வேலை செய்த தண்டனை கைதிக்கு 4 மாதமாக ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு என்றாவது சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா?. அவர்களுக்கு சரியாக குறித்த தேதியில் சம்பளம் வரவு வைக்கப்படும். ஆனால் கைதிகளுக்கு நாளொன்றுக்கு ரூ. 30 முதல் ரூ. 50 வரை ஊதியமாக கொடுக்கப்படுகிறது. அதைக்கூட முறையாக வழங்கவில்லை என்றால் எப்படி எடுத்துக்கொள்வது எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் டிச.16-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here