திருவேற்காட்டில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
விழா மேடையில் இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். பிறகு அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் சீமானை பொதுவேட்பாளராக நிறுத்தி, தவெகவுக்கு நெருக்கடி கொடுக்க திமுக, அதிமுக தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இன்று நாட்டில் என்ன நடக்கிறது என்பதை, நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சில பேர் சோஃபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
ஆனால், நீங்கள் அத்தனை பேரும் நாங்கள் என்றைக்கும் திமுகவுடன் இருப்போம் என்று உறுதியோடு வந்திருக்கிறீர்கள். இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்குமான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது, உங்களுக்கு திமுக என்றைக்குமே ஒரு காவல் அரணாக இருக்கும்.
இப்பொழுது ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த அரசியல் பேரிடர் காலத்திலும் நம் தமிழகத்தை நிச்சயம் உங்களுக்காக நின்று காப்போம், தமிழ் நாட்டை மீட்போம்” என்றார்.
முன்னதாக சீமான் பேசுகையில், “தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் கொடுப்பதுதான் பெற்றோர்களின் உயரிய கடமையும் பொறுப்பும் ஆகும்” என்று நபிகள் கூறியுள்ளார். மணமக்களாகிய நீங்களும் வருங்காலத்தில் பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட ஒழுக்கத்தையும் கல்வியையும் கொடுக்கும் பெற்றோர்களாக விளங்க வேண்டும்” என்றார்.
