மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசுப் படகு விபத்துக்குள்ளானதில், பல குடும்பங்கள் தங்களின் உறவினர்களைப் பறிகொடுத்துப் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.
மகிழ்ச்சியாக தொடங்கிய அந்த சுற்றுலாப் பயணம், மரணப் போராட்டமாக மாறிய துயரமான தருணங்களை விபத்தில் உயிர் தப்பியவர்கள் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11-ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியின்போது மேலும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வழக்கறிஞர் ரோஷன் ஆனந்த் வர்மா கூறுகையில், “படகு ராட்சத அலைகளில் சிக்கிக் கொண்டது. சுமார் அரை மணி நேரம் அங்கு மரண ஓலம் கேட்டது. நாற்காலிகள், மேஜைகள் மற்றும் மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். படகின் ஒரு பகுதி உடைந்து உள்ளே தண்ணீர் புகத் தொடங்கியது. எங்கள் கண் முன்னே மரணம் தெரிந்தது.
உடனடியாகச் செயல்பட்டு, அங்கிருந்த ‘லைஃப் ஜாக்கெட்’களை எடுத்து எங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் அணிவித்தோம். அவ்வாறு செய்யாவிட்டால் நாங்கள் யாரும் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டோம். 11 வயது குழந்தையுடன் எப்படியோ கரையை நோக்கி நீந்தி உயிர் தப்பினோம். வானிலை முன்னெச்சரிக்கை இருந்தும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு படகு இயக்கப்பட்டுள்ளது.
அவசர காலத்தில் ஊழியர்கள் முறையான வழிகாட்டுதல்களை வழங்கவில்லை. மீட்புப் படகுகள் உடனடியாக வந்திருந்தால் அத்தனை உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம். இதற்குப் பொறுப்பேற்று சுற்றுலாத் துறை அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.
