Home விளையாட்டு செய்திகள் “கடினமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்” – தோல்விக்குப் பிறகு ஹர்திக் வேதனை

“கடினமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்” – தோல்விக்குப் பிறகு ஹர்திக் வேதனை

0

ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ச்சியாக 4-வது போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்ததையடுத்து அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ‘கடினமான கேள்விகளுக்கு நாம் பதில் கூற வேண்டியிருக்கும்’ என்று கூறியுள்ளார்.

225 ரன்கள் வரை சென்றிருக்க வேண்டிய மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி, துல்லிய பந்து வீச்சின் மூலம் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் என்று முடக்கியதோடு அல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் 16.3 ஓவர்களில் இலக்கை விரட்டி அபார வெற்றி பெற்றனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் புள்ளிகள் அட்டவணையில் 9-ம் இடத்துக்குச் சரிந்துள்ளது.

“சில கடினமான முடிவுகளை எடுப்பதற்கான நேரம் இதுதானா என்பதைத் தீர்மானம் செய்ய வேண்டும். விஷயங்கள் எங்களுக்கு சாதகமாகத் திரும்ப வேண்டுமானால் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். இவையெல்லாம் கடினமான கேள்விகளுக்கு நாம் பதில் கூற வேண்டியதாக மாறலாம். தனிப்பட்ட வீரர்கள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போதைக்கு நான் அதிகம் பேச விரும்பவில்லை. என்ன தவறு, எங்கே தவறு என்பதை சரி செய்ய வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். தனிப்பட்ட வீரர்களா அல்லது குழுவா அல்லது திட்டமிடுதலில் கோளாறா? எது தோல்விக்கு காரணம் என்பதை அலச வேண்டும். விரைவில் தீர்வு கண்டு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ் எங்களை பந்தாடி விட்டது என்றுதான் கூற வேண்டும். அவர்கள் எங்களை விட பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று நன்றாகவே செயல்பட்டனர். அதுதான் உண்மையில் தோல்விக்கான காரணம்” என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version