பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவில் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது. முதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது, ஆனால் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே அமைந்தன.
இரு அணிகளும் ஒன்றையொன்று மிகச் சரியாக எதிர்கொண்டு தடுத்ததால் கடுமையான உத்திகளுக்கான போராக மாறியது. 33-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் டெக்லான் ரைஸ் வீசிய ஃபிரீ-கிக்கை ஜான் ஸ்டோன்ஸ் கோல் கம்பத்துக்கு அருகே தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இது மிக நெருக்கமான கோல் வாய்ப்பாக அமைந்தது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் கோலை அடித்தது. 55-வது நிமிடத்தில் ஹாரி கேன் ஆடுகளத்தின் பின் பகுதிக்கு வந்து மார்கன் ரோஜர்ஸை நோக்கி பந்தை அனுப்ப முயன்றார், ஆனால் அர்ஜெண்டினா வீரர் லிசாண்ட்ரோ மார்டினெஸ் அந்தப் பந்தை அந்தரத்தில் அக்ரோபாட்டிக் முறையில் தடுத்து வெளியேற்றினார். அங்கிருந்து தப்பிய பந்தை கைப்பற்றிய டெக்லான் ரைஸ், அதை மீண்டும் ரோஜர்ஸிடம் அனுப்பினார்.
ரோஜர்ஸ் கோல் பகுதியை நோக்கி அடித்த அசாத்தியமான கிராஸை, மொலினாவுக்கு பின்னால் இருந்து மின்னல் போல் புகுந்த அந்தோனி கார்டன் அர்ஜெண்டினா அணியின் எமிலியானோ மார்டினெஸைக் கடந்து மிக அழகாகக் கோலாக மாற்றினார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. இந்த கோலை தொடர்ந்து அர்ஜெண்டினா தனது ஆட்ட வியூகத்தை மாற்றியது.
முன்னோக்கிச் சென்று தீவிரமாகத் தாக்கத் தொடங்கியது. அதே நேரத்தில், இங்கிலாந்து அணி தங்களின் இந்த ஒற்றை கோல் முன்னிலையைப் பாதுகாக்கும் உறுதியுடன், தற்காப்பு அரணை இன்னும் பலப்படுத்திய நிலையில் தாக்குதல் ஆட்டத்தில் இருந்து பின்வாங்கியது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அர்ஜெண்டினா அணி கடைசி 7 நிமிடங்களில் ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றியது.
85-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் தற்காப்பு அரணை உடைத்து அர்ஜெண்டினா பதிலடி கொடுத்தது. லயோனல் மெஸ்ஸியிடம் இருந்து பந்தை பெற்ற என்ஸோ பெர்னான்டஸ் 25 அடி தூரத்தில் இருந்து வலுவாக அடித்த ஷாட் இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் பிக்போர்டின் தடுப்பை கடந்து கோல் போஸ்ட்டின் கீழ் இடது கார்னரை துளைத்தது. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
இதன் பின்னர் ஆட்டம் தங்களுக்குச் சாதகமாக மாறியதை உணர்ந்த அர்ஜெண்டினா அணியின் பயிற்சியாளரான லயோனல் ஸ்கலோனி, புதிய தாக்குதல் ஆட்டக்காரர்களைக் களமிறக்கினார். ரோட்ரிகோ டி பால் மற்றும் லவ்தாரோ மார்டினெஸ் ஆகிய இருவரின் வருகையும் அர்ஜெண்டினாவின் தாக்குதல் ஆட்டத்துக்கு புதிய ஆற்றலை வழங்கியது.
காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 90+2-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் உதைத்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டுத் தெறிக்க, அங்கிருந்து தப்பிய பந்தை மிக வேகமாகத் தன்வசப்படுத்திய லயோனல் மெஸ்ஸி, அதை 6 அடி தூர பாக்ஸ் பகுதிக்குள் தூக்கி அடித்தார். அங்கு வேகமாக நுழைந்த பதிலி வீரரான லவ்தாரோ மார்டினெஸ் பந்தை தலையால் முட்டி கோல் அடிக்க இங்கிலாந்து அணி அதிர்ச்சியில் உறைந்தது. இந்த கோல் காரணமாக அர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
வரும் 20-ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு நியூயார்க் நகரில் உள்ள நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 3 முறை சாம்பியனான அர்ஜெண்டினா அணி, 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. முன்னதாக 19-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மியாமி கார்டனில் நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
‘மனம் உடைந்தது’
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் கூறும்போது, “அணி, ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்காகவும் என் மனம் உடைந்துபோயுள்ளது. நாங்கள் இந்த இடத்துக்கு வருவதற்கு கடினமாக உழைத்தோம். வீரர்கள் தங்களின் ரத்தம், வியர்வை, கண்ணீர் என அனைத்தையும் சிந்திப் போராடினார்கள். ஆனால், இப்படி இறுதித் தருணத்தில் வெற்றியைத் தவறவிட்டது எங்களை பாதித்துள்ளது” என்றார்.
3-வது முறையாக…
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் கடந்த 1986-ம் ஆண்டு தொடரின் கால் இறுதியில் டீகோ மரடோனா அடித்த ‘ஹேண்ட்பால்’ கோல் மற்றும் 1998-ம் உலகக் கோப்பையில் டேவிட் பெக்காம், டீகோ சிமியோனியை உதைத்ததற்காக சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆடுகளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இங்கிலாந்து சந்தித்த பெனால்டி ஷூட்-அவுட் தோல்வி ஆகிய வரலாற்றுச் சம்பவங்களைப் போலவே, தற்போதைய அரை இறுதி போட்டியின் தோல்வியும் இங்கிலாந்து அணிக்கு தீரா ஏமாற்றத்தை அளித்துள்ளது.
‘பயத்தால் தோல்வி’
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தாமஸ் டுஹெல் கூறும்போது, “ அர்ஜெண்டினா அதிக ரிஸ்க்கை எதிர்கொண்டு, ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்து விளையாடியது. தங்களுக்கு இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற எண்ணம் அவர்களிடம் இருந்திருக்கலாம், அது அவர்களை பயமுமின்றி சுதந்திரமாக விளையாட வைத்தது. ஆனால், நாங்கள் இழந்துவிடக்கூடாது என்ற பயத்துடன் விளையாடியதால் தாக்குதல் ஆட்டத்தில் இருந்து பின்வாங்க நேரிட்டது” என்றார்.
13-ல் 14 கோல்கள்
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி கோல்கள் அடிக்காவிட்டாலும், 2 கோல்களை அடிப்பதற்கு உதவியாக இருந்தார். தேசிய அணி, கிளப் ஆகியவற்றுக்காக மெஸ்ஸி கடைசியாக விளையாடிய 13 ஆட்டங்களில் 14 கோல்களை அடித்து அசத்தி உள்ளார். மேலும் 11 கோல்களை அடிக்கவும் உதவியுள்ளார்.
விடா முயற்சிக்கு பலன்
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் 0-1 என பின்தங்கிய நிலையில் இருந்த நிலையிலும் நடப்பு சாம்பியனுக்கு தகுந்தபடியிலான செயல்திறனை வெளிப்படுத்தி அனைவரையும் மீண்டும் ஒரு முறை வியக்க வைத்தது அர்ஜெண்டினா அணி. கடைசி 7 நிமிடங்களில் 2 கோல்களை அடித்து வெற்றியை தங்களது பக்கம் இழுத்தது லயோனல் மெஸ்ஸி அன்ட் கோ. அந்த அணி 15 முறை கோல் அடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
கோல் அடிக்கும் வாய்ப்புகள் பலமுறை முறியடிக்கப்பட்ட போதிலும் எந்த சூழ்நிலையிலும் பதற்றம் அடையாமலும், போராட்ட குணத்தை விட்டுக்கொடுக்காமலும் அர்ஜெண்டினா அணி விளையாடிய விதம் வெகுவாக ரசிக்கும்படி அமைந்தது. கால் இறுதி போட்டியிலும் அர்ஜெண்டின அணி, எகிப்துக்கு எதிராக 0-2 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்து இறுதிக்கட்ட நிமிடங்களில் மீண்டு வந்து வெற்றி கண்டிருந்தது.
துரத்தும் துரதிருஷ்டம்
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அர்ஜெண்டினாவிடம் தோல்வி அடைந்தது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து அணி அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 1990-ல் ஜெர்மனியிடமும் 2018-ல் குரோஷியாவிடமும் இங்கிலாந்து அணி அரை இறுதியில் தோல்வி கண்டிருந்தது.
11 போட்டிகளிலும்…
அர்ஜெண்டினாவின் நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி தான் விளையாடிய தொடர்ச்சியான 11 உலகக் கோப்பை போட்டிகளிலும் கோல் அல்லது கோல் அடிக்க உதவி செய்துள்ளார். 1966-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவொரு வீரராலும் படைக்கப்படாத மிக நீண்ட சாதனை இதுவாகும்.
5 முறை மட்டுமே
அர்ஜெண்டினாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்த போதிலும் கடைசி 7 நிமிடங்களில் தோல்வி அடைந்தது. இதற்கு அந்த அணி தற்காப்பு ஆட்டத்தை கையில் எடுத்ததே காரணமாக அமைந்தது. 55-வது நிமிடத்தில் கோல் அடித்த அந்த அணி அதன் பின்னர் கோல் அடிப்பதற்கு 5 முறை மட்டுமே முயற்சி எடுத்தது. இந்த தோல்வியால் 1966-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை வெல்லும் கனவுடன் பயணித்த இங்கிலாந்து அணி இம்முறையும் ஏமாற்றம் அடைந்தது.
