பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான பிரான்ஸ் அணி, 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயினுடன் மோதியது.
ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரர் மார்க் குகுரெல்லா பாக்ஸிற்குள் கிராஸை அனுப்பினார். அதை பிரான்ஸ் அணியின் வீரர் லூகாஸ் டிக்னே துள்ளியவாறு தனது நெஞ்சால் கட்டுப்படுத்தினார். இதையடுத்து அவர், பந்தை கிளியர் செய்ய முயன்ற போது ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லாமின் யமால் பின்னால் இருந்து வேகமாக ஓடிவந்து துள்ளியவாறு பெனால்டி பகுதிக்குள் பந்தைப் பறிக்க முயன்றார்.
அப்போது பந்து லூகாஸ் டிக்னே முழங்கையில் பட்ட நிலையில் அவர், லாமின் யமாலை உதைத்தார். இதனால் நடுவர் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி கிக் வழங்கினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிக்கேல் ஒயர்சபால் கோல் அடிக்க ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதியின் இறுதிக்கட்டத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திரம் கிலியின் எம்பாப்பேவின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போனது.
51-வது நிமிடத்தில் லாமின் யமால் அடித்த கோல் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. எனினும் அடுத்த 7-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி 2-வது கோலை அடித்தது. 58-வது நிமித்தில் பெட்ரோ போரோ பந்தை வேகமாக டானி ஆல்மோவின் கால்களுக்கு பாஸ் செய்துவிட்டு, பாக்ஸிற்குள் தனது ஓட்டத்தைத் தொடந்தார். டானி ஆல்மோ அசத்தலான ரிவர்ஸ் பாஸ் மூலம் பந்தை மீண்டும் பெட்ரோ போரோவின் வழிக்கு மாற்ற, அவர் அற்புதமாக பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் ஸ்பெயின் அணி 2-0 என முன்னிலை பெற்றது.
கடைசி வரை போராடிய போதிலும் பிரான்ஸ் அணியால் ஸ்பெயின் அணியின் தடுப்பு அரணை கடந்து கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 20-ம் தேதி நியூ ஜெர்சியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியானது அர்ஜெண்டினா அல்லது இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.
ஸ்பெயின் அணி 16 வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி கடைசியாக 2010-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் கால்பதித்து முதன்முறையாக மகுடம் சூடியிருந்தது.
37 ஆட்டங்களில் தோல்வி இல்லை
உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில் ஸ்பெயின் அணி 2024-ம் ஆண்டு மார்ச் முதல் வழக்கமான ஆட்ட நேரத்தில் 37 ஆட்டங்களில் தோல்வியை (28 வெற்றி, 9 டிரா) சந்திக்காமல் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், 2007-09 காலகட்டத்தில் தொடர்ச்சியாக 35 போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்த தனது சாதனையை அந்த அணியே முறியடித்துள்ளது.
5வது கோல்!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று பிரான்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியின் மிக்கேல் ஒயர்சபால் பெனால்டி கிக்கில் கோல் அடித்தார். நடப்பு தொடரில் அவர், அடித்த 5-வது கோல் இதுவாகும். ஸ்பெயின் அணிக்காக அவர், 60 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 30 கோல்களை அடித்துள்ளார்.
ஹாட்ரிக் வெற்றி
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பட்டம் வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பிரான்ஸ் அணியை வீழ்த்தியது. சர்வதேச கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியை தொடர்ச்சியாக 3-வது முறையாக வீழ்த்தியுள்ளது ஸ்பெயின் அணி.
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் லாமின் யமால் அடித்த கோல் உதவியுடன் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் பிரான்ஸை தோற்கடித்தது. தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற நேஷன்ஸ் லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை பந்தாடியிருந்தது. இந்த வரிசையில் தற்போது உலகக் கோப்பையிலும் பிரான்ஸ் அணியை வென்று அசத்தி உள்ளது ஸ்பெயின்.
பிரான்ஸை முடக்கிய ஸ்பெயின் வியூகம்
பிரான்ஸ் அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் உத்தி ரீதியான திறனையும், பந்துக் கட்டுப்பாட்டையும் ஸ்பெயின் அணி ஆயுதமாக பயன்படுத்தியது. இந்த வியூகத்தை கொண்டு பிரான்ஸின் வேகமான எதிர்தாக்குதலை முற்றிலும் முடக்கியது.
மேலும் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்த கிலியன் எம்பாப்பே, மைக்கேல் ஒலிசே, பார்கோலா, உஸ்மான் டெம்பேலே ஆகியோரை கொண்ட பிரான்ஸின் தாக்குதல் துறையை முற்றிலும் செயலிழக்க வைத்தது ஸ்பெயின் அணியின் களவியூகம். ஸ்பெயினின் தடுப்பரணும், தந்திரமான ஆட்டமும் பிரான்ஸை சாதாரண அணியாகவே தோற்றமளிக்கச் செய்தது. ஸ்பெயின் அணியிடம் இருந்து பந்தை தட்டிப்பறிக்க முடியாமலும், எதிர்தாக்குதல் தொடுத்து அச்சுறுத்தல் கொடுக்க முடியாமலும் போட்டி முழுவதுமே கடும் அழுத்தத்துக்கு பிரான்ஸ் அணி தள்ளப்பட்டது.
சொல்லியடித்த யமால்
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம் அணிக்கு எதிரான கால் இறுதி போட்டிக்கு பின்னர் ஸ்பெயின் அணியின் இளம் புயலான லாமின்யமால், “பிரான்ஸ் அணியை நாங்கள் ஏற்கெனவே இரு முறை வீழ்த்தி உள்ளோம். எங்களை கண்டு அவர்கள் பயப்படுவார்கள். எங்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை“ என்று கூறியிருந் தார். லாமின் யமால் கூறியது போன்றே பிரான்ஸ் அணியின் தாக்குதல் ஆட்டத்துக்கு ஸ்பெயின் தடுப்பு அரண் எந்தவொரு கட்டத்திலும் அனுமதிக்கவில்லை.
‘தவறு செய்துவிட்டோம்’
பிரான்ஸ் அணியின் பயிற்சியாளரான டிடியர் டெஷாம்ப்ஸ் கூறும்போது, “ஸ்பெயின் அணியால் மிகச் சிறப்பாக டிஃபெண்ட் செய்ய முடிந்தது. அவர்கள் அனைத்து இடங்களையும் அடைத்துவிட்டனர். மேலும் நாங்களும் சில தொழில்நுட்பத் தவறுகளை செய்தோம். எங்களுடைய ஆட்டத் தரம் தரநிலைக்குக் குறைவாக இருக்கும்போது, எதிரணிக்கு நெருக்கடிகளை உருவாக்குவது கடினம்” என்றார்
‘தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்’
அரை இறுதி தோல்விக்கு பின்னர் பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே கூறும்போது, “ஸ்பெயின் ஆட்டத்தையும் பந்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் அணி. அவர்களை அதை செய்ய நாங்கள் அனுமதித்துவிட்டோம். ஸ்பெயினின் ஆட்டமுறையை மாற்றியமைக்காத போது விளையாடுவது கடினம். கேப்டனாக, இந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்க வேண்டும், அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் இறுதிப் போட்டிக்குச் செல்ல விரும்பினோம். ஆனால் எங்களால் செல்ல முடியவில்லை” என்றார்.
கலைந்த கனவு
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணிக்கு எதிரான அரை இறுதியில் தோல்வி அடைந்ததன் வாயிலாக தொடர்ச்சி யாக 3-வது இறுதிப் போட்டியில் கால்பதிக்கும் பிரான்ஸ் அணியின் கனவு கலைந்தது. கிலியன் எம்பாப்பேவை உள்ளடக்கிய பிஃபா தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணி 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் வரும் 19-ம் தேதி மியாமி கார்ட னில் விளையாட உள்ளது.
