60 ஆண்டு கால கனவு பொய்யாய் பழங்கதையாய்ப் போனது. அட்லாண்ட்டாவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதியில் ஆட்டத்தின் 84-வது நிமிடம் வரை 1-0 என்று முன்னிலை பெற்று, இறுதிப் போட்டி கனவுடன் 60 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வரும் எத்தனம் அடுத்த 7 நிமிடங்களில் தவிடுபொடியாக அர்ஜெண்டினா அபார வெற்றி பெற்றது.
முதல் பாதியில் இரு அணிகளின் உத்தியும் அட்டாக், அட்டாக் மேலும் அட்டாக் என்றே இருந்தது. ஒரு வீரருக்கு ஒரு வீரர் என்ற அளவில் டேக்கிள் திட்டமிடப்பட்டு எதிரணியினரிடம் அட்டாக்கை எடுத்துச் சென்று இரு அணிகளும் ஆடியதால் ஆட்டம் உடல் ரீதியான மோதலாக இருந்தது, ஆனால் த்ரில்லிங்காக இருந்தது. முதல் பாதி முடியும்போது கோல்கள் கணக்கில் ஒன்றுமில்லை. ஆனால் ஃபவுல்கள் கணக்கில் அர்ஜெண்டினா 12 ஃபவுல்களையும் இங்கிலாந்து 7 ஃபவுல்களையும் செய்திருந்தன.
உலகக் கோப்பை அரையிறுதி என்றால் சும்மாவா? அர்ஜெண்டின அனுபவம் என்றால் சும்மாவா? அதுவும் ‘த்ரீ லயன்ஸை’ விடவும் ஆகிருதியான ‘லயன்’ மெஸ்ஸி இருப்பது என்ன சும்மாவா? – இப்படி இங்கிலாந்து பார்மி ஆர்மி ரசிகர்கள் கும்பலுக்கு அர்ஜெண்டின ரசிகர்கள் தொடர்ந்து நினைவுபடுத்திய வண்ணம் இருந்தனர் என்பது அர்ஜெண்டீனா மீது அந்நாட்டு ரசிகர்கள் வைத்திருந்த அபார நம்பிக்கையையே காட்டுகிறது.
இங்கிலாந்தை அர்ஜெண்டினா வீட்டுக்கு அனுப்பிய, கனவைத் தகர்த்த அந்த 7 நிமிடங்களும் கூட லயன் மெஸ்ஸிக்குச் சொந்தமானதுதான். என்சோ பெர்னாண்டஸ் 20 அடி தூரத்திலிருந்து அடித்த இடி போன்ற ஷாட், அபார கோல் கீப்பர் பிக்ஃபோர்டை ஏமாற்றி வலைக்குள் சென்ற தருணம் சமநிலை கோலின் முக்கியத் தருணம் என்றால், அந்த கோலுக்கு முக்கியக் காரணியாக உதவி புரிந்தவர் மெஸ்ஸி.
இது நடந்தது 85-வது நிமிடத்தில். பிறகு 90 நிமிடம் கழிந்து எக்ஸ்ட்ரா டைம் 2-வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி அருமையாக இங்கிலாந்து தடுப்பரணை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கிராஸ் செய்ய, மார்ட்டினேஸ் தலையால் முட்டி அடித்த கோல் இங்கிலாந்தின் சவப்பெட்டிக்கு ஆணியறைந்தது.
அட்டாக்கிங்கில் இருந்து தடுப்பாட்டத்துக்கு மாறிய இங்கிலாந்தின் அந்த 7 நிமிடக் கோளாறு:
ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் இரு அணிகளும் அட்டாக்கிங் தெரிவை மேற்கொண்டு நடுக்களத்தில் மோதி ரைட் விங், லெஃப்ட் விங் என்று கோல் நோக்கி முன்னேறி எதிரணியினரின் பகுதிக்குள் அடிக்கடி நுழைந்து வந்த தருணம். அப்போது இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனின் டீப் பாஸ் ஒன்று மற்றொரு இங்கிலாந்து வீரர் டெக்லான் ரைஸிடம் வர, அப்போது மற்றொரு இங்கிலாந்து வீரர் மார்கன் ராஜர்ஸ் ரைட் விங் பக்கம் செல்ல, ரைஸின் பந்தை ராஜர்ஸ் அற்புத கிராஸ் செய்ய அதை ஆந்தனி கார்டன் அமைதியாக கோலுக்குள் செலுத்தினார்.
இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றது. 90 நிமிட ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் வரை இங்கிலாந்து முன்னிலையே பெற்றிருந்தது.
ஒரு கோல் அடித்தவுடன் இங்கிலாந்து தனது அட்டாக்கிங் உத்தியை தொடர்ந்து முதல் பாதி போலவே ஒருவருக்கொருவர் என்ற ரீதியில் அர்ஜெண்டினாவை முடக்கியிருக்க வேண்டும். ஆனால், தவறாக தடுப்பரணை வலிமையாக்குவோம் என்று முடிவெடுத்ததால் நடுக்களத்தில், வலது, இடது புறங்களில் அர்ஜெண்டினாவுக்கு நிறைய வாய்ப்புகள் சுதந்திரமாகக் கிட்டியது.
இதனையடுத்து அர்ஜெண்டினா கடுமையாக பிரஷர் போட்டு ஒவ்வொரு முறையும் இங்கிலாந்து கோல் பகுதிக்குள் நுழைந்தது. முதல் பாதியில் கோல் முயற்சியே காணாத இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் உடனடியாக இரண்டு அற்புத சேவ்களைச் செய்ய வேண்டியிருந்தது, அதோடு அவர் கடும் நெருக்கடிக்குள்ளானார்.
இங்கிலாந்து தடுப்பரணை உத்தியாக்க அர்ஜெண்டின மேலாளர் ஸ்கேலோனி அட்டாக்கிங் வீரர்களைக் கொண்டு வந்தார். பெர்னாண்டோ கொன்சாலேஸ், மார்ட்டினேஸ் என்று மாற்றங்களை உருவாக்க, இங்கிலாந்தோ கோல் அடித்த கார்டனை உள்ளே அழைத்து தடுப்பு வீரர் கான்சாஸை களத்திற்கு அனுப்பியது.
பிக்ஃபோர்டின் 2 சேவ்களில் ஒன்று உண்மையில் உலகத்தரமானது. 69-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர்கள் இருவரைக் கடந்து மெஸ்ஸி அற்புதமாக கிராஸ் செய்ய கொன்சாலேஸ் அடித்த முயற்சியை பிக்ஃபோர்ட் அதியற்புதமாகத் தடுத்தார். பிறகு 76-வது நிமிடத்தில் மேக் அலிஸ்டர் மேற்கொண்ட கோல் முயற்சியையும் தடுத்தார்.
தடுப்பரண் உத்திக்கு மாறியதால் அர்ஜெண்டினா தொடர்ந்து இங்கிலாந்து கோலை நோக்கி முன்னேறி கடும் பிரஷர் போட்டது. அப்போதுதான் 85-வது நிமிடத்தில் தூரத்திலிருந்து வந்த பந்தை மெஸ்ஸி இங்கிலாந்து கோல் பாக்சிற்கு சற்று வெளியேக் கட்டுப்படுத்தி அங்கு தடுப்பு வீரர் யாருமில்லாது இருந்த என்சோ பெர்னாண்டஸுக்கு அடிக்க அவர், 20 அடியிலிருந்து இடி போல் பிக்போர்டைத் தாண்டி கோல் அடித்து 1-1 என்று சமன் செய்தார்.
இந்தக் கோலுக்குப் பிறகும் திருந்தாத இங்கிலாந்து தடுப்பாட்ட உத்தியில் தங்கள் பகுதியிலேயே நிற்க அர்ஜெண்டினா சுதந்திரமாக பந்துகளைக் கையாண்டு இங்கிலாந்து பகுதிக்குள் அடிக்கடி பிரவேசித்து கடும் நெருக்கடி கொடுக்க, 92-வது நிமிடத்தில் மீண்டும் லியோனல் மெஸ்ஸி அற்புதமாக இங்கிலாந்து வீரர்களுக்குப் போக்குக் காட்டி துல்லிய கிராஸ் ஒன்றைச் செய்ய அங்கு மார்ட்டினேஸ் நெருக்கமாக நின்ற இடத்திலிருந்து தலையால் முட்டி கோலாக்கினார். அதுவே வெற்றி கோல்.
இங்கிலாந்து அட்டாக் உத்தியிலிருந்து தடுப்புக்கு மாறியதால் ஏற்பட்ட தோல்வி என்று இங்கிலாந்து ஊடகங்களும் ரசிகர்களும் மனமுடைந்து கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றன. ஆனால், இந்த விமர்சனம் உண்மைதான். ஒரு கோல் முன்னிலை எப்போதும் தடுப்பதற்குப் போதாது. மேலும் எப்படி அர்ஜெண்டினா எகிப்துக்கு எதிராக மீண்டெழுந்தது என்பதைப் பார்த்தும் இங்கிலாந்து எப்படி இப்படியொரு தவறைச் செய்யலாம் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
இது அர்ஜென்டினாவின் ஏழாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டி நுழைவாகும். இதில் அவர்கள் தங்கள் நான்காவது உலகக் கோப்பையை வெல்வதையும், தொடர்ந்து இரண்டு முறை இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற நாடுகளான இத்தாலி (1934, 1938) மற்றும் பிரேசிலுடன் (1958, 1962) இணைந்து அத்தகைய சாதனையைப் படைத்த மூன்றாவது நாடாகத் திகழ்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், புளோரிடாவின் மியாமி கார்டன்ஸில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணி பிரான்ஸை எதிர்கொள்ளவுள்ளது.
