சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு அந்த அணியின் வீரர் டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க மறுத்தார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. இது இப்போது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று ஹைதராபாத் நகரில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 67-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 255 ரன்கள் குவித்தது. 256 ரன்களை விரட்டிய ஆர்சிபி அணி, 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்துக்கு பிறகு இரு அணியின் வீரர்களும் வழக்கத்தின்படி கைகுலுக்கிக் கொண்டனர். அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் உடன் ஆர்சிபி வீரர் விராட் கோலி கைகுலுக்க மறுத்துவிட்டார். அந்த அணியின் மற்ற வீரர்களுடன் அவர் கைகுலுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
காரணம் என்ன?
வழக்கமாக கிரிக்கெட் போட்டியின் போது இரண்டு அணிகளின் வீரர்களும் ஆட்டத்துக்கு பிறகு கைகுலுக்குவது வழக்கம். அதை கோலி தவிர்த்து விட்டார். அதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
ஆர்சிபி அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்த போது ஹெட் உடன் கோலி நேரடியாக வார்த்தை மோதலில் ஈடுபட்டார். அதன் வீடியோவும் இப்போது வெளியாகி உள்ளது. அதில் டிராவிஸ் ஹெட்டை ‘இம்பாக்ட் வீரர்’ என்றும், பந்து வீச வருமாறும் கோலி சொல்லியது பதிவாகி உள்ளது. இந்த ஆட்டத்தில் 15 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 19-வது ஓவரை வீசி ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் விக்கெட்டை ஹெட் கைப்பற்றி இருந்தார். முதல் இன்னிங்ஸில் 16 பந்துகளில் 26 ரன்களை அவர் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்த போது மிகவும் ஆக்ரோஷமாக அதை கோலி கொண்டாடி இருந்தார். அதுதான் இந்த வார்த்தை மோதலுக்கு தொடக்கப்புள்ளி என கருதப்படுகிறது.
கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை செய்துள்ள கோலியின் இந்த செயலை சமூக வலைதள பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.
