விலைவாசி உயர்வு, வீட்டுவசதி தட்டுப்பாடு, சீரழிந்து வரும் பொதுச்சேவைகள் மற்றும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அல்பேனியா, பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் 2 வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் லட்சக் கணக்கானோர் வீதிகளில் திரண்டு பேரணி நடத்தினர். பகலில் அமைதியாகத் தொடங்கிய போராட்டங்கள் மாலையில் கலவரமாக மாறின. பிரான்ஸ் உள்துறை அமைச்சக தகவலின்படி 4.10 லட்சம் பேரும், தொழிற்சங்கங்கள் கூற்றுப்படி 8 லட்சம் பேரும் சனிக்கிழமைப் போராட்டத்தில் பங்கேற்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த 70,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாரிஸில் போர்ட் டி இத்தாலியிலிருந்து போர்ட் டி வின்சென்னெஸ் வரை நடந்த பேரணியின் இறுதியில் வன்முறை வெடித்தது.
போலீசார் தடியடி, கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீரைப் பீச்சியடித்துக் கூட்டத்தைக் கலைத்தனர். பிரான்ஸ் முழுவதும் இதுவரை 1,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இத்தாலி: மிலன், ரோம், துரின் ஆகிய நகரங்களில் இளைஞர்களும் மாணவர்களும் திரளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஏற்கெனவே இருந்த நூற்றுக்கணக்கான வீரர்களுடன் கூடுதலாக 500 ராணுவ வீரர்களைப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி களமிறக்கியுள்ளார்.
ஸ்பெயின்: பார்சிலோனா வின் பிளாக்கா டி கட்டலூனியா சதுக்கத்தில் கருப்பு உடை மற்றும் முகமூடி அணிந்த கும்பல் 14 க்கும் மேற்பட்ட கடைகளின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களைக் கொள்ளையடித்தது. வன்முறையில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
போர்ச்சுகல்: லிஸ்பன் உள்ளிட்ட நகரங்களில் வாடகை உயர்வு மற்றும் நில உரிமையாளர்கள் எளிதாகக் குடியிருப்பாளர்களை வெளியேற்றும் சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
அல்பேனியா: தலைநகர் திரானாவில் கல்விக்கட்டணக் குறைப்பு மற்றும் பிரதமர் எடி ராமா ராஜினாமா செய்யக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கற்கள் வீசப்பட்டதால் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீரைப் பீச்சியடித்தனர்.
