சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் ஏவுகணைகள், ட்ரோன்களை வீடியோ, புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று இந்திய தூதரகம் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது. சவுதி அரேபியாவுக்கும் ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது.
ஹவுதி படையின் தலைநகரான சனா மற்றும் ராணுவ தளங்கள் மீது சவுதி அரேபிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் வயல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சிப் படை ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. சவுதி அரேபிய எல்லைக்குள் நுழையும் ஏவுகணைகள், ட்ரோன்களை சிலர் வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக சவுதி அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை நேற்று மீண்டும் வெளியிட்ட அறிக்கையில், “ஏவுகணைகள், ட்ரோன்களை வீடியோ, புகைப்படம் எடுத்தால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
என்ன வகையான தண்டனை வழங்கப்படும் என்பது குறித்து சவுதி அரசு விளக்கம் அளிக்கவில்லை.
தீவிரவாத தடுப்பு சட்டம்..
எனினும் அந்த நாட்டு அரசு வட்டாரங்கள் கூறும்போது, “ஏவுகணைகள், ட்ரோன்களை வீடியோ, புகைப்படம் எடுத்தால் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். வெளிநாட்டினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் சவுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் சவுதி அரேபியாவின் எச்சரிக்கை அறிவிப்பு, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு உள்ளது. அதோடு இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவில், “சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் ஏவுகணைகள், ட்ரோன்களை வீடியோ, புகைப்படம் எடுக்க வேண்டாம். சவுதியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
