சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான வீடியோ வெளியான நிலையில், இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ‘போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்’ என்று கள்ளச்சாராயம் விற்பவர் தைரியமாக சொல்லும் அளவுக்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப்படுத்தியுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசென்ஸாகப் பயன்படுத்தி சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்குதானா?
எனவே, உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்யவேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: சேலம் வளமாதேவி ஊராட்சியில் அனுமதியின்றி செயல்படும் பாரில் கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையை கடுமையாக கண்டிக்கிறோம். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு திமுகவோடு தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில் மற்றொரு கள்ளக்குறிச்சி சம்பவம் அரங்கேறாமல் காவல்துறை தடுக்க வேண்டும்.
போதையின் பாதையில் செல்லாதீர்கள், அது உங்களை அழித்துவிடும் என முதல்வர் விளம்பர அரசியல் செய்யும் நிலையில் டாஸ்மாக் மூலமாகவே கள்ளச்சாராயத்தை விற்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தேமுதிக சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.