ஈரான் மீது தரைவழியாக தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராகி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரில் ஈரானின் ராணுவ தளங்கள், அணு சக்தி தளங்கள், எண்ணெய் வயல்கள் என 10,000-க்கும் மேற்பட்ட இடங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி உள்ளன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் முடக்கி உள்ளது.
போரை முடிவுக்கு கொண்டு வர 15 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் முன்மொழிந்தார். இதை ஈரான் ராணுவம் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் சுமார் 45,000 வீரர்கள் உள்ளனர்.
மேலும் அமெரிக்க கடற்படையின் 16 போர்க்கப்பல்கள் அங்கு முகாமிட்டு உள்ளன. புதிதாக யுஎஸ்எஸ் ட்ரிபொலி, யுஎஸ்எஸ் சான் டியாகோ, யுஎஸ்எஸ் நியூ ஓர்லியன்ஸ் ஆகிய 3 போர்க்கப்பல்கள் கடந்த சனிக்கிழமை மத்திய கிழக்கு பகுதியை வந்தடைந்தன. இதில் ட்ரிபொலி போர்க்கப்பலில் உள்ள 3,500 வீரர்கள் கடல், வான், தரை வழி போரில் திறன் வாய்ந்தவர்கள் ஆவர். இந்த போர்க்கப்பலில் கடல் மற்றும் தரையில் செல்லக்கூடிய படகுகள் உள்ளன.
மேலும் பாராசூட் மூலம் தரையில் இறங்கும் திறன் கொண்ட வீரர்கள் உள்ளனர். போர்க்கப்பலின் மேல்தளத்தில் 33 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. ட்ரிபொலி போர்க்கப்பல் மூலம் ஈரான் மீது தரைவழி தாக்குதலை தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வட்டாரங்கள் கூறியதாவது: ஈரான் மீது இறுதியாக தரைவழி தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அதிதீவிர தாக்குதல் நடத்தப்பட்டு, ஈரான் ராணுவத்தின் அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்படும். அங்கு தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்படும். மேலும் ஈரானின் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்ற திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் ஈரானின் பொருளாதாரம் முழுமையாக முடக்கப்படும். இந்த தரைவழி போர் சில வாரங்கள் வரை நீடிக்கக்கூடும். ஈரான் மீதான தரைவழி தாக்குதலின்போது அந்த நாட்டிடம் உள்ள 400 கிலோ யுரேயனித்தை கைப்பற்றவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறும்போது, “அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாக அமெரிக்கா வெளிப்படையாக கூறி வருகிறது. ஆனால் அதேநேரம் ஈரான் மீது ரகசியமாக தரைவழி தாக்குதலை தொடங்க அந்த நாடு திட்டமிட்டு இருக்கிறது. அமெரிக்க வீரர்கள் தரையில் கால் பதிக்கும்போது ஈரான் ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். எங்களது வீரர்களும் ஏவுகணைகளும் தயார் நிலையில் உள்ளன” என்று தெரிவித்தார்.














