தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ரூ.10,021 கோடி மதிப்பில் 5 பல்வழிப்பாதை ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குட்பட்ட 17 மாவட்டங்களில் ரூ.10,021 கோடி முதலீட்டில், 5 பல்வழிப்பாதை ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது இந்திய ரயில்வேயின் தற்போதைய பாதை வலையமைப்பில் சுமார் 540 கி.மீ. தூரம் கூடுதலாகும்.
இந்த திட்டங்கள் மூலம் சுமார் 2,121 கிராமங்களுக்கு ரயில் இணைப்பு மேம்படுத்தப்படும். இதன்மூலம், இக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 52 லட்சம் மக்கள் பயன் பெறுவர். அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அரக்கோணம்–ரேணிகுண்டா 3-வது மற்றும் 4-வது ரயில் பாதை – 77 கி.மீ. வைட்ஃபீல்டு–பங்காரப்பேட்டை 3-வது மற்றும் 4-வது பாதை – 47 கி.மீ. ஓசூர்–ஓமலூர் இரட்டை ரயில் பாதை – 147 கி.மீ. சேலம்–கரூர்–திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை – 159 கி.மீ. செகந்திராபாத்
(காட்கேசர்)–காஜிபேட் பாதை – 110 கி.மீ. ஆகியவை ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் ஆகும். ரயில் பாதைகளின் திறன் அதிகரிப்பதன் மூலம் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து கணிசமாக மேம்படும். இந்தப் பல்வழிப் பாதை திட்டங்கள் ரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், 2029-30-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளன.
மேலும், திருப்பதி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில், கோட்டிலிங்கேஸ்வரர் தேவாலயம், ஸ்ரீ சீதி பைரவேஸ்வர சுவாமி கோயில், பங்காரு திருப்பதி, கோலார் தங்க வயல், ஒகேனக்கல் அருவி, ஓசூர் கோட்டை, மேட்டூர் அணை, கொடைக்கானல் மலைப்பகுதி, சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல் கோட்டை, கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், யாதகிரிகுட்டா கோயில், புவனகிரி கோட்டை, சுரேந்திரபுரி மற்றும் ஸ்வர்ணகிரி கோயில் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களுக்கான ரயில் இணைப்பும் மேம்படும்.
நிலக்கரி, சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு, கன்டெய்னர்கள், வாகனங்கள், உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளை கொண்டு செல்வதற்கும் இந்த ரயில் பாதைகள் முக்கியமானவையாக உள்ளன. இந்த ரயில் பாதைகளின் திறன் அதிகரிப்புப் பணிகள் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 4.7 கோடி டன் சரக்குப் போக்குவரத்தை கையாள முடியும்.
