மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்திலும் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை அணியும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில கல்வி அமைச்சக துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளதாவது: கல்வி துறை அமைச்சர் மதன் திலவர், வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் நேர்மறையான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிக தீவிரமாக உள்ளார். இதன் மூலமாகத்தான் அவர்கள் வாழ்க்கையில் சரியான மதிப்பு மற்றும் கலாச்சாரங்களை கற்று உணர முடியும். இதனை உணர்ந்தே கல்வித் துறை அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரேமாதிரியான சீருடை அணியும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் விருப்பம்போல் உடையணிந்து பள்ளிக்கு வரமுடியாது. ஆசிரியர்களின் உடை மாணவர்களிடத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை மாற்றவே இந்த சீருடை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
பல ஆசிரியர்கள் தங்களது உடலை வெளிகாட்டும் வகையில் உடையணிந்து வருகின்றனர். இது, மாணவர் மற்றும் மாணவியர் இடத்தில் நன்மதிப்பை உருவாக்காது என்று கல்வி அமைச்சர் திலவர் பொதுமேடையிலேயே கூறிய கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.