ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் ரயில் பாதை குண்டுவெடிப்பு வழக்கில், பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் தொடர்பிலிருந்த பெண் உட்பட இருவர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்புப் படை, ஸ்ரீ கங்காநகர் காவல்துறை, பஞ்சாப் காவல் துறை இணைந்து நடத்திய நடவடிக்கையில், 21 வயதான மஹக்தீப் கவுர், 22 வயதான தவீந்தர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் மஹக்தீப் கவுர், பாகிஸ்தானைச் சேர்ந்த ‘சாச்சா, ஷா’ ஆகிய இருவருடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காதல் மொழிகளாலும் பணத்தாலும் அவரைத் தங்கள் வலையில் வீழ்த்திய இவர்கள், ரயில் பாதையில் குண்டுவெடிப்பு நடத்த அவருக்குப் பணம் கொடுத்துள்ளனர். இவரிடமிருந்து 2 ஆயுதங்கள், 46 தோட்டாக்கள், ரூ.30,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவருக்குத் தங்குமிடம், மோட்டார் சைக்கிள், குற்றம் நடந்த இடத்துக்குச் செல்லப் போக்குவரத்து வசதி ஆகியவற்றை வழங்கி உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவரைக் காவல் துறை பிடித்து விசாரித்து வருகிறது.
இத்தகைய முறையை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அடிக்கடி கையாள்வதாகக் காவல் துறை கூறியுள்ளது. ஸ்ரீகங்கா நகரைச் சேர்ந்த பபிதா என்ற பெண்ணையும் ஐஎஸ்ஐ இதே முறையில் வலையில் வீழ்த்தியதாக காவல் துறை முன்னதாக தெரிவித்திருந்தது. கவுர் தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். அவருடைய கணவர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் தற்போது சிறையில் உள்ளார்.
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் அருகே உள்ள ராம்சிங்புர் பகுதியில் நவம்பர் 3-ம் தேதி இரவு 9.45 மணியளவில் இந்தத் தண்டவாள குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் ரயில் பாதையின் இரு சிலீப்பர் கட்டைகள் நொறுங்கின. தண்டவாளம் சேதமடைந்தது. 2.5 அடி ஆழத்துக்குப் பள்ளம் ஏற்பட்டது.
