பஞ்சாபில் நெல் அறுவடைக்குப் பிறகு பயிர்க்கழிவுகளை (வைக்கோல்) எரித்ததாக இதுவரை 5,835 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதுதொடர்பாக ரூ.1.08 கோடிக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிஏகியூஎம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பஞ்சாபின் 23 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 5,835 பயிர்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் அதிகபட்சமாக பாட்டியாலா மாவட்டத்தில் 391 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் பதிவான சம்பவங்களில் 5,539 இடங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 2,442 இடங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், பயிர்க்கழிவுகள் எரிப்பதைத் தடுக்கவும் விவசாயிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 2,152 வழக்குகளில் சுற்றுச்சூழல் இழப்பீடாக மொத்தம் ரூ.1,08,55,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் இதுவரை ரூ.40,40,000 வசூலிக்கப்பட்டுள்ளது. பயிர்க்கழிவு எரிப்பு தொடர்பாக 1,834 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வருவாய்த் துறை ஆவணங்களில் 2,015 வழக்குகளில் ‘சிவப்புக் குறியீடு’ பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
