அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பக் ராய், அணில் மிஸ்ரா, கோபால் ராவ் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள அயோத்தி காவல் துறையினர், அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பக் ராயிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, “காணிக்கை திருட்டு விவகாரத்தில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. டின்னு (எ) ராம் ஷங்கர் யாதவ் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை. இந்த தகவல் கிடைத்தவுடன் நான்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க உ.பி. அரசுக்கு கடிதம் எழுதினேன். எனினும், காணிக்கை விஷயத்தில் முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது எனது பொறுப்பு” என்று சம்பக் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ராமர் கோயில் சிசிடிவி கேமராக்களைக் கண்காணிக்க அர்ஜுன் தேவ் என்ற அதிகாரியை உ.பி. அரசு நியமித்திருந்தது. இவர் ராமர் கோயில் கட்டுவதற்கு முன்பாக 2009 முதல் ரேடியோ பராமரிப்பு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரை பணிமாற்றம் செய்ய விடாமல் அறக்கட்டளை தடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால், காணிக்கை திருட்டு புகார் எழுந்தவுடன் சில நாட்களுக்கு முன்பு லக்னோவுக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.
எனினும், அவரை அயோத்திக்கு வரவழைத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். கோயிலில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 1,600 சிசிடிவி கேமராக்கள், அர்ஜுன் தேவின் பொறுப்பில் இருந்துள்ளன. திருட்டு நடப்பது தெரிந்தும் இவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன் கேமரா பதிவுகளையும் அவர் சேமிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், முக்கிய குற்றவாளி டின்னு யாதவுடன் அர்ஜுன் தேவ் நெருக்கமான நட்புடன் இருந்துள்ளார். இதே வழக்கில் ராமர் கோயிலில் தனியார் பாதுகாப்புப் பணியாளர்களில் 400 பேரும் போலீஸார் கண்காணிப்பில் உள்ளனர்.
விஸ்வ இந்து பரிஷத் சர்வதேசத் தலைவர் அலோக் குமார் மீண்டும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: காணிக்கை திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்காக வாதாட மாட்டோம் என்ற அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தின் முடிவை நான் ஆதரிக்கவில்லை. இதுபோன்ற செயல் அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. எனவே, அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தின் முடிவு அரசியலமைப்புக்கு முரணானது. அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
