சிரியாவின் இடைக்கால அதிபரை புகழ்ந்த ட்ரம்ப்: பின்னணி என்ன?  

0
139

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரபு நாடுகளுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவை அதிபர் ட்ரம்ப் சந்தித்திருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியிருப்பதற்கான பின்னணியை சற்று விரிவாக பார்க்கலாம்.

அதிபர் ட்ரம்பின் இந்த அரபு நாடுகளுக்கான பயணத்தில் அவர் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவை சவுதி தலைநகர் ரியாத்தில் சந்தித்தார். கடந்த 25 ஆண்டுகளில் (கால் நூற்றாண்டுகள்) இந்த இரு நாட்டைச் சேர்ந்த தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறை ஆகும். அப்போது அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலுடன் சிரியாவின் உறவு மேம்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

1979 காலக்கட்டத்தில் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக சிரிய அரசு செயல்பட்டதால் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. அதன்பிறகு அமெரிக்காவுக்கும், சிரியாவுக்கும் பெரிதாக பேச்சுவார்த்தை இல்லை. அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போரால், அந்நாட்டுமக்கள் கடும்பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தனர்.

அதோடு, அகமது அல் ஷரா மற்றும் சிரியாவின் அதிபராக இருந்த அல் அசாத் ஆகியோருக்கு இடையே கடும் மோதல் போக்கு இருந்தது. அப்போது இவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் நிர்ணயித்தது நினைவுகூரத்தக்கது. ஆனால் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, அல்-ஷரா சிரியாவின் இடைக்கால அதிபராகப் பதவியேற்றார். பின்னர் கடந்த ஆண்டு அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

அமெரிக்காவின் முக்கிய அறிவிப்பு: இந்நிலையில், “பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. சிரியா பின்னடைவை சந்திக்க அவை ஒரு முக்கிய பங்காற்றின. இப்போது சிரியா முன்னேற வேண்டும் என்பதால் அந்த தடைகளை நீக்க உத்தரவிடுகிறேன்” என ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

சிரியா மீதான தடைகளை நீக்க சவுதி அரேபிய இளவரசர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொருளாதார தடையை ட்ரம்ப் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிரியா மீதான தடைகளை அமெரிக்கா நீக்குவதாகத் ட்ரம்ப் அறிவித்த பின்னர் இருவரும் சந்தித்துக் கொண்டனர். ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால், உள்நாட்டுப் போர், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த சிரிய மக்கள் சற்று நிவாரணம் பெறுவார்கள் எனலாம்.

அல் ஷராவின் பின்னணி: அல் ஷரா முன்பு அபு முகமது அல்-கோலானி என்று அழைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை நடத்திய அல் கொய்தா அமைப்பினருடன் தொடர்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் சிரியாவில் அசாத் ஆட்சிக்கு எதிராகப் போராடுவதற்கு முன்பு இவர் ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார். மேலும் பல ஆண்டுகள் அமெரிக்கக் காவலில் இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்தசமயத்தில், அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் பயங்கரவாதியை அதிபர் ட்ரம்ப், “இளமையான, வலுவான, கவர்ச்சிகரமான நபர்” என்று தெரிவித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, அல் ஷராவுடன், அதிபர் ட்ரம்ப் கை குலுக்கி கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here