இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக விரைந்து செயல்பட வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி அவரவர் நாடுகளின் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அடுத்த சில மாதங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரி விகிதங்களை அவர் அறிவித்தார். இதன்படி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த சூழலில் வரிவிதிப்பு தொடர்பான வழக்கை கடந்த பிப்ரவரி இறுதியில் விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பை ரத்து செய்தது.
இதனிடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் 20 முதல் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் சிறப்பு வர்த்தக குழுவினர் கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை டெல்லியில் முகாமிட்டு இந்திய குழுவினருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சூழலில் பிரான்ஸின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். அப்போது வர்த்தக ஒப்பந்தம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது’’ என்று தெரிவித்தார்.
முக்கிய பேச்சுவார்த்தை
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக விரைந்து செயல்படுமாறு அவரவர் நாடுகளின் உயர் அதிகாரிகளுக்கு அதிபர் ட்ரம்பும், பிரதமர் மோடியும் உத்தரவிட்டு உள்ளனர்.
அமெரிக்க அரசின் சிறப்பு பிரதிநிதி ஜேமீசன் கிரீர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகிறார். அப்போது இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
