குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்டத்தில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் திருநங்கை நலவாரியம் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் போன்றவற்றை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
எனவே திருநங்கை நல வாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டைபெறாதவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் அட்டை, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை போன்றவைகள் இதுவரை பெறாத திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை இவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.