நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான பிரியா அதிகாரி, 6 நாட்களுக்குள் சுமார் 100 மீட்புப் பணிகளில் ஈடுபட்டு ஏராளமானோரை காப்பாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதுகுறித்து, நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான பிரியா அதிகாரி கூறியதாவது: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா பகுதியில் இன்னும் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். திடீர் வெள்ளத்துக்குப் பிறகு திமுரே பகுதியில் இருந்து முதல் இரண்டு நாட்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
ராணுவத்தின் 6 ஹெலிகாப்டர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டன. 6 நாட்களுக்குள் சுமார் 100 மீட்புப் பணிகளில் ஈடுபட்டு ஏராளமானோரை காப்பாற்றினேன். ஒவ்வொரு முறையும் நான் சென்று தரையிறங்கும்போது, அங்கு மக்கள் இருப்பதையும், அவர்கள் எங்களை நோக்கி கையசைப்பதையும் பார்க்கிறேன். அப்போது, ‘நீங்கள் உயிர் தப்பிவிட்டீர்கள்’ என்று அவர்களிடம் கூறுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யார் இந்த பிரியா அதிகாரி?
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாக கருதப்பட்ட விமானப் போக்குவரத்துத் துறையில், நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டன் என்ற பெருமையை பிரியா அதிகாரி பெற்றார். சுற்றுச்சூழல் அறிவியல் படித்துள்ளார். பின்னர் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றினார். அதன் பிறகு, பிலிப்பைன்ஸ் சென்று ஹெலிகாப்டர் ஓட்டுவதற்கான பயிற்சியை பெற்றார். 2017-ம் ஆண்டு முழுநேர ஹெலிகாப்டர் விமானியாக ஆனார்.
பின்னர், அதிக உயரத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் நிபுணத்துவம் பெற்றார். இமயமலைப் பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், எவரெஸ்ட் சிகரத்தில் காயமடைந்த மலையேற்ற வீரர்களையும் மீட்டுள்ளார். சுமார் 6,200 மீட்டர் உயரம் வரையிலும் அவர் மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார்.
