
குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் யாதவர் கீழ தெருவை சேர்ந்த இசக்கியப்பன். இவரது மகன் கண்ணன் (25). ஏசி மெக்கானி. கண்ணனின் தாய் லலிதா மற்றும் உறவினர்கள் நேற்று காலை குலசேகரப்பட்டிணம் கோவிலுக்கு சென்று விட்டனர். அவரது தந்தை இசக்கியப்பன் வேலைக்காகச் செங்கல் சூளைக்கு சென்றிருந்தார். இதனால் கண்ணன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
கண்ணன் வீட்டின் தொழுவத்தில் இருந்த மாட்டைக் குளிப்பாட்டுவதற்காக தண்ணீர் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கண்ணன் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார். வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய இசக்கியப்பன், தனது மகன் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மெயின் சுவிட்ச்சை அணைத்துவிட்டு, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கண்ணனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கண்ணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளர் சுந்தர் ராஜபெருமாள் விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் ஆரல் வாய்மொழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.