ஈரான் மீதான போர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியதிலிருந்து, சர்வதேச நிதிச் சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சில மர்மமான வர்த்தகங்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்க அரசின் முக்கியமான கொள்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே, சந்தையில் பெரும் முதலீடுகள் செய்யப்படும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா மீதான தாக்குதல், ஈரான் மீதான தாக்குதல், அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இன்சைடர் டிரேடிங் நடைபெற்றதாகவும், அதன் மூலம் சில வர்த்தகர்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதிபரின் வெள்ளை மாளிகையில் ரகசியத் தகவல்களை முன்கூட்டியே அறிந்து இந்த ‘உள்நோக்க வர்த்தகம்’ நடைபெற்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் வர்த்தக உலகில் பலரிடம் எழுந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் வரை இத்தகைய முறைகேடுகளை மறுத்து வந்த வெள்ளை மாளிகை, ஏப்ரல் மாதத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. ரகசியக் கொள்கை முடிவுகள் தொடர்பான அரசு ஊழியர்கள் சந்தைகளில் வர்த்தகம் செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
முறையற்ற வகையில் லாபம் ஈட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ரகசியத் தகவல்கள் கசிந்தது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் கோரிக்கை வலுத்துள்ளது.
முக்கிய முடிவுகள் வெளியாவதற்கு முன்பே வர்த்தகம் நடைபெறுவது சந்தையின் நேர்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. சிலருக்கு மட்டும் ரகசியத் தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து அமெரிக்கப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியங்களான எஸ்இசி மற்றும் சிஎப்டிசி ஆகியவை முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதனால் கோடிக்கணக்கில் பலன் அடைந்தோர் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.














