இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிலும் உள்ள வர்த்தக வாய்ப்புகளை, பரஸ்பரம் சிறப்பாக பயன்படுத்திக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஸ்காட் பெசன்ட் உடனான சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட்டை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்திய – அமெரிக்க பொருளாதார கூட்டாண்மை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த விவாதம் பயனுள்ளதாக இருந்தது’’ என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து ஸ்காட் பெசென்ட் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. எங்கள் பேச்சுவார்த்தையின்போது விநியோகச் சங்கிலிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், பரஸ்பர நலன்கள் சார்ந்த தேசிய மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்’’ என கூறியுள்ளார்.
ஸ்காட் பெசன்ட் உடனான சந்திப்பை அடுத்து, மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மார்கோ ரூபியோவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
இந்திய – அமெரிக்க மூலோபய கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, வர்த்தகம், எரிசக்தி, அணுசக்தி, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பாக நாங்கள் விவாதித்தோம். இரு நாடுகளின் பொதுவான நலன்களை முன்னெடுத்துச் செல்ல ஆரம்பகால சந்திப்புகளுக்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன், முக்கிய கனிமங்கள் குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையே புதிய பொருளாதார வாய்ப்புகளைத் திறக்க இணைந்து பணியாற்றுவது குறித்தும் விவாதித்தோம். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் பாராட்டினோம்’’ என தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதால் இருதரப்பு ஏற்றுமதி மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பரஸ்பரம் பயன்பெறும் வகையில் ஏற்றுமதிகளை மேற்கொள்வது குறித்து இரு நாடுகளும் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.



