ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மீதான வர்த்தக நீதிமன்ற தடை நிறுத்திவைப்பு

0
144

உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில், வர்த்தக நீதிமன்றத்தின் தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம்.

சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் என உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வரி உயர்வை ட்ரம்ப் அறிவித்தார். அவரது இந்த வரி விதிப்பு கொள்கை ரீதியான முடிவு உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு அமெரிக்காவில் உள்நாட்டிலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இது சட்டவிரோதமானது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மன்ஹாட்டன் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ட்ரம்ப் வரிவிதிப்புக்கு எதிரான மனு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பின் அனைத்து வாதங்களையும் நிராகரித்த சர்வதேச வர்த்தக நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு நேற்று தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்த தடை உத்தரவை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியது. வரி விதிப்பின் மீதான தடை உத்தரவு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று ட்ரம்ப் நிர்வாகம் வாதிட்டது. இதையடுத்து, வர்த்தக நீதிமன்றத்தின் வரி விதிப்பு மீதான தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம். இதன் மூலம் உலக நாடுகள் மீதான வரி விதிப்பு நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளலாம்.

இந்த இடைநிறுத்தம் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் அல்லது காரணம் என எதையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக நீதிமன்றத்தின் தடை உத்தரவு ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்த நிலையில், அதற்கு தற்காலிக தீர்வு இப்போது கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here