இந்தியா மற்றும் ஜமைக்கா நாடுகளுக்கு இடையே பல் வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஜமைக்கா நாட்டுக்கு 9 நாள் பயணமாகச் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் காமினா ஜே.ஸ்மித்தை திங்கள்கிழமை சந்தித்து விரிவாகப் பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெய்சங்கர் கூறியதாவது: டிஜிட்டல் பரிமாற்றம், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆகிய துறைகளில் சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கரீபியன் நாடுகளுக்கான வர்த்தக நுழைவாயிலாக ஜமைக்கா திகழ்கிறது. இந்நாட்டின் கிட்சன் நகரில் இந்திய உதவியுடன் ஊரக வாழ்வாதாரத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட ஜமைக்காவிற்கு மனிதாபிமான அடிப்படையில் 30 டயாலிசிஸ் இயந்திரங்கள், 40 மீன்பிடிப் படகுகள் மற்றும் 200 ஜிபிஎஸ் கருவிகளை இந்தியா வழங்கி வருகிறது. மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 2028-29 காலகட்டத்திற்கு இந்தியா தற்காலிக உறுப்பினராக ஜமைக்கா அளிக்கும் ஆதரவை வரவேற்கிறோம். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
