தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆலங்குடியில் குரு பகவான் சந்நிதியில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழக அரசு அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு திருப்தி இல்லை என்பதால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, விவசாயிகளின் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கும்பகோணத்தில் போலீஸ் அதிகாரியின் கையை முறுக்கி ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்துள்ளனர். ஆட்சிக்கு வந்து விட்டதால் தவெகவினர் சட்ட ஒழுங்கு பிரச்சினையை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்ப வங்கள் நடந்து வருகின்றன. சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்து 6 மாதம் அவகாசம் கொடுப்போம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், அதே நேரத்தில் அந்த 6 மாதங்களுக்குள் அதிகளவிலான பாலியல் பிரச்சினைகளும், கொலை சம்பவங்களும் நிகழ்ந்து விடக்கூடாது. பாலியல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் எனில் அரபு நாடுகளில் தண்டனை கொடுப்பது போல, பொதுமக்கள் கூடும் இடத்தில் வைத்து தண்டனை கொடுக்க வேண்டும் அல்லது என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
