தமிழக எல்லை மறுவரையறை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம், மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மற்றும் எல்லை மறுவரையறை ஆணைய தலைவர் பா.ஜோதி நிர்மலாசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள், 177 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்தல், அதன் தொடர்புடைய வார்டு எல்லை மறுவரையறை செய்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள், 177 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து, அரசுக்கு பரிந்து செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதில் ஊரக வளர்ச்சி ஆணையர் வே.அமுதவல்லி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
