திருவட்டார் அருகே கொடுப்பைகுழி பகுதியில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. நேற்று மாலை வழக்கம் போல் பூஜை முடிந்து கோவில் நடையை பூட்டி விட்டு நிர்வாகத்தினர் சென்றனர். இன்று காலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் கோவிலில் சாமி கும்பிட சென்றபோது கோவிலின் காம்பவுண்டில் மாட்டியிருந்த உண்டியல் உடைத்து எடுக்கப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கோவில் உண்டியலை பக்கத்து தோட்டத்தில் வீசி எறிந்து விட்டு சென்றிருந்தனர்.
இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கோவில் தலைவர் சுதர்சனன் வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தது என்று கூறினார். இந்த கோவிலில் இதற்கு முன் மூன்று முறை உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் தற்போதும் கொள்ளை நடந்துள்ளது. இந்த திருட்டு சம்பவத்தை நடத்தியவர்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது சம்பந்தமாக கோவில் தலைவர் சுதர்சனகுமார் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.