திமுக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் விமர்சிக்க எந்த தடையும் இல்லை. அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய்தான் தார்மிகப் பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். முதல்வர் உடனடியாக கரூருக்கு சென்று, அனைத்து விதமான பணிகளையும் துரிதப்படுத்தினார். ஆனால், முதல்வர் கரூருக்கு சென்றதை வைத்து அதிமுக பொதுச் செயலாளர் அரசியல் செய்கிறார். எங்கள் கூட்டணிக்குள் எந்தப் பிரிவும் இல்லை. கூட்டணியில் இருக்கும் தலைவர்கள், ஒருவரையொருவர் விமர்சிக்கவும் எந்த தடையும் இல்லை.
அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். அந்த வகையில், கரூர் சம்பவம் தொடர்பாக திருமாவளவன் அவரது கருத்தை கூறியுள்ளார். கூட்டணிக்கு அப்பால் தேசம், தேசத்தின் நலன் மீது நாங்கள் அக்கறையுடன் இருக்கிறோம். தவெக தலைவர் விஜய் எந்தக் கூட்டணியில் இருந்தாலும், அந்தக் கூட்டணியை கண்டிப்பாக தோற்கடிப்போம்.
மாநிலங்களில் ஆளு நர்கள்மூலம் இரட்டை ஆட்சி நிலையை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஆளுநர் என்ற பதவியை வைத்துக்கொண்டு, முதல்வரையே கடந்து செல்ல முயற்சிப்பது என்பது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் பயங்கர தாக்குதல். இதற்கு எதிராக தமிழக அரசு ஒரு போரை தொடுத்திருக்கிறது. இந்த ஜனநாயக போரைத் தொடங்கியுள்ள முதல்வர் ஸ்டாலினுடன் துணை இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.