
அஞ்சுகிராமம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி நகைகள் திருடப்ட்ட சம்பவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 3 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
அஞ்சுகிராமத்தை அடுத்த வட்டக்கோட்டை பகுதியில் மெஞ்ஞானபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பா மகன் செல்வஆனந்த் என்பவா் நகைக் கடை நடத்தி வருகிறாா். கடந்த அக். 24 ஆம் தேதி கடையை பூட்டிவிட்டுச் சென்றாராம். பின்னா், அக். 26 ஆம் தேதி வந்துபாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ஒரு கிலோ பழைய வெள்ளி நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அஞ்சுகிராமம் ஆய்வாளா் செல்வி தலைமையில் உதவி ஆய்வாளா் பிரியராஜ்குமாா் மற்றும் போலீஸாா் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில் இந்த திருட்டில் ஈடுபட்டதாக, திருநெல்வேலி மாவட்டம் முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (22), காந்திநகா் பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (20), ஜெயபிரகாஷ் தெருவைச் சோ்ந்த ஐயப்பன் (22) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ வெள்ளி நகைகளை மீட்கப்பட்டனா்.