மத்திய அரசு திட்டங்களை முடக்குவதையே தமிழக அரசு கடமையாக கொண்டுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு

0
184

மத்திய அரசின் திட்டங்களை முடக்குவதையே தமிழக அரசு கடமையாக கொண்டுள்ளது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். பொது சிவில் சட்டம் மட்டும் நிலுவையில் உள்ளது. ஆனால், திமுக அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50 வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை.

பள்ளிகல்வித் துறை சார்ந்த மத்திய அரசின் திட்டத்தில் பயன்பெற ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து போட்டுவிட்டு, தற்போது முடியாது என்று கூறுகிறார்கள். ஜவுளித் தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அமைச்சருடன், தொழில் துறையினரை சந்திக்க உதவினோம்.

கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம் காலதாமதம் ஆவதற்கு திமுக அரசுதான் காரணம். விஸ்வகர்மா, மலிவு விலை மருந்தகம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்துகின்றன.

ஆனால், தமிழகத்தில் போட்டிக்கு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளன. மத்திய அரசின் திட்டங்களை முடக்குவதையே தமிழக அரசு கடமையாக கொண்டுள்ளது. கீழடி ஆராய்ச்சியைப் பொறுத்தவரை, மத்திய அரசு கேட்கும் தகவல்களை தமிழக அரசு வழங்கவில்லை.

நான் பாஜக தொண்டன். கட்சியை வளர்ப்பதற்காக மட்டும்தான் இருக்கிறேன். தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். எங்கு வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டுமோ அங்கே மூடிக்கொள்வேன். எங்கு பேச வேண்டுமோ அங்கு நிச்சயம் பேசுவேன். எனக்கு ஆதரவாளர்கள் என்று யாருமில்லை. அனைவரும் நண்பர்கள்தான்.

பாமகவைப் பொறுத்தவரை ராமதாஸ், அன்புமணி இருவருமே முக்கியமானவர்கள். இருவரும் ஒரே நேர்க்கோட்டுக்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை திட்டங்களுக்கு மாநில அரசின் ஒத்துழைக்காததால், உ.பி. போன்ற மாநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

அண்ணா பல்கலை. விவகாரத்தில் பல மர்மங்கள் உள்ளன. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் குற்றவாளி என்று நான் கூறவில்லை. ஆனால், அவரும் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இரு காவல் அதிகாரிகளும் போனில் பேசியுள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் மேல்முறையீடு செய்யுமாறு, அவரது வழக்கறிஞரிடம் அறிவுறுத்தியுள்ளேன். தேவையான ஆதாரங்களை நான் அவர்களுக்கு வழங்கி உதவுவேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here