சஜீவ் பழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’ படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ஜித்தேஷ் விஸ்வம்பரன், அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் செப். 17-ல் வெளியாகிறது.
இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் கருணாஸ் பேசும்போது, “கடந்த 2001-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா அண்ணன் இயக்கத்தில் லொடுக்கு பாண்டியாகத் திரையுலகில் எனது பயணத்தை ஆரம்பித்தேன். நான் அதிகம் மலையாள படங்களை விரும்பிபார்ப்பேன்.
அதனால் மலையாள இயக்குநர்கள், டெக்னீஷியன்ஸ் உடன் இணைந்து ஒரு படமாவது பணிபுரிய ஆசைப்பட்டேன். அது இப்போது நடந்திருக்கிறது. எனது 20 ஆண்டு கால ஆசையை இந்த படம் நிறைவேற்றி இருக்கிறது.
இந்தப் படம் சாமானியர்களைப் பற்றியது. அதனால்தான் இயல்பான நடிகர்களை இயக்குநர் தேர்வு செய்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை இந்தப் படத்தில் இயக்குநர் சஜீவ் எழுப்பி இருக்கிறார்” என்றார்.
