மறைந்த பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் உடல், கர்நாடக அரசின் முழு அரசு மரியாதையுடன் மைசூருவில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.
பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, மைசூருவில் நேற்றுமுன்தினம் காலமானார். அவருக்கு வயது 88. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரெபால்லி அருகிலுள்ள பல்லப்பட்டா கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்த ஜானகி, தனது 19-வது வயதிலேயே திரைத்துறைக்கு வந்துவிட்டார். சுமார் 60 ஆண்டு காலமாக, 48 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, ஒடியா, துளு, உருது, சிங்களம் உட்பட 20 மொழிகளில் பாடி சாதனை படைத்தவர். கான கோகிலா, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசையரசி என்றும் புகழப்படுபவர் ஜானகி.
கே.வி.மகாதேவன், கண்டசாலா, எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி, ஜிகே வெங்கடேஷ், இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் என பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பக்திப் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடியுள்ள எஸ்.ஜானகி, ‘மவுனப் போராட்டம்’ என்ற தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
குழந்தையாகவும் பாட்டியாகவும் ஆண் குரலிலும் அருமையாகப் பாடி ஜாலங்கள் நிகழ்த்திய இவர், 4 முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த 1977-ல் ‘16 வயதினிலே’ படத்தில் ‘செந்தூரப் பூவே’ பாடலுக்காகவும், 1981-ல் ‘ஒப்போல்’ மலையாளப் படத்துக்காக ‘எட்டுமனூரம்பலத்தில்’ பாடலுக்காகவும், 1984-ல் ‘சிதாரா’ தெலுங்குப் படத்துக்காக ‘வெண்ணல்லோ கோதாரி அந்தம்’ பாடலுக்காகவும், 1992-ல் ‘தேவர் மகன்’ படத்தில் ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்காகவும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு சினிமாவில் இருந்து விலகிய எஸ்.ஜானகி, மகனுடன் மைசூருவில் வசித்து வந்தார். அவரது கணவர் வி.ராம்பிரசாத் 1997-ம் ஆண்டு காலமானார். அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா, கடந்த ஜனவரியில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். இது ஜானகிக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது. அந்த கவலை காரணமாக ஜானகியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்றுமுன்தினம் அவர் உடல் நிலை மேலும் மோசமானதை அடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.
தென்னிந்திய பாடகிகளில் தனக்கென தனி அடையாளத்தைக் கொண்டிருந்த ஜானகியின் மறைவு அவரது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்
ளது. அவர் மறைவுக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இசை அமைப்பாளர் இளையராஜா, பாடகி பி.சுசீலா உட்பட பல அரசியல் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த எஸ்.ஜானகியின் உடல், மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று காலை 8 மணியளவில் வைக்கப்பட்டது.
அங்கு பொதுமக்கள், பாடகர்கள், பாடகிகள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிற்பகல் 3 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எஸ்.ஜானகியின் உடல் ஊர்வலமாக, கனியனஹண்டியில் உள்ள அவரது பண்ணைத் தோட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். கர்நாடக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து 30 குண்டுகள் முழங்க, அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்கள் சூழ, தகனம் செய்யப்பட்டது. அவரது பேத்தி அப்சரா வைத்யுலா இறுதிச் சடங்குகளைச் செய்தார். கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘‘கன்னட திரையுலகினருடன் ஆலோசனை நடத்திய பிறகு, மறைந்த பாடகி எஸ்.ஜானகிக்கு நினைவுச் சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
