கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள படம் ‘என்ன விலை’. இதில் ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், சுவாமி நாதன், தீபா சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். சஜீவ் பழூர் இயக்கியுள்ளார். குடும்ப த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இதை, கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ளார்.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கருணாஸ் கூறும்போது, “இது ராமேஸ்வரம் பின்னணியில் நடக்கும் படம். மலையாள எழுத்தாளரான சஜீவ் பழூர், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழில்தான் படம் இயக்க வேண்டும் என்று இப்படத்தை இயக்கி இருக்கிறார். நான் பல இயக்குநர்களிடம் பணியாற்றி இருந்தாலும் இவர் தெளிவான இயக்குநர்.
யாரிடம் என்ன ‘எக்ஸ்பிரஷனை’ வாங்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்து வாங்கினார். சில படங்களில் நடிக்கும்போது நமக்குப் பெயர் கிடைக்கும். அதே போல ஒரு நடிகனாக எனக்கு முக்கியமான படம் இது. இன்றைய சினிமா வியாபார நிலை எல்லோருக்கும் தெரிந்தது தான்.
ஆனால், இந்தப் படம் வெளியாகும் முன்பே டிஜிட்டல், சாட்டிலைட் வியாபாரம் முடிந்துவிட்டது. நல்ல படங்களை மக்கள் கைவிட்டதில்லை. இந்தப் படமும் அப்படியான ஒன்றாக இருக்கும். இதுவரை யாரும் பேசாத ஒரு விஷயத்தை இப்படம் பேசுகிறது. நிமிஷா சஜயன் வழக்கறிஞராக நடித்திருக்கிறார்” என்றார்.
