ஜே.டி.சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேகா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’. கடத்தல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் மறுபக்கம் குறித்து பேசும் இந்த க்ரைம் த்ரில்லர் படத்தை, இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரியான தோ.சமய முரளி எழுதி இயக்கியுள்ளார்.
எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். ராம் பிரகாஷ் தயாரித்துள்ள இப்படம் பற்றி தோ.சமய முரளி கூறும்போது, “நான் விசாரித்த பல சுங்கத்துறை வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதைதான் இப்படம். கடத்தல், நிழல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் செயல்பாடுகளை சுவாரஸியமான சினிமா மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு வேலையில் சுங்கத்துறை வகிக்கும் முக்கியப் பங்கைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தப் படத்தின் நோக்கம். ரசிகர்கள் இந்தப் படத்தை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
மூத்த ஐஆர்எஸ் அதிகாரியான தோ.சமய முரளி, ‘சுங்கம்: தி ஹெரிடேஜ் ஆஃப் சென்னை கஸ்டம்ஸ்’, ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’, ‘காக்கி’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய சுங்கத்துறை தொடர்பான 2 ஆய்வுக் கட்டுரைகள் ‘வேர்ல்டு கஸ்டம்ஸ் ஜர்னலில்’ வெளியாகியுள்ளன. அவர் இயக்கிய முதல் குறும்படமான ‘புதிய பார்வை’, மும்பை சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது. ‘சைலன்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ள அவர் அதற்கு இசையும் அமைத்துள்ளார்.
