“தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது; அதை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், “மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் நமக்குத்தான் ஒதுக்கி இருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலும் எதுவும் நடக்காது. ராமதாஸை அங்கு உள்ளவர்கள் தவறாக வழிநடத்தி கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிக்கும் ராமதாஸுக்கும் உண்மையாக உழைத்தேன்.
இனியும் உண்மையாக உழைப்பேன். தேர்தல் நேரத்தில் திமுக-வினர் பூத்தில் இறங்கி வேலை பார்ப்பார்கள். எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் கவனம் செலுத்துவார்கள். நாம் தேர்தலுக்கு முன்பு வரை களத்தில் இறங்கி போராடுவோம். அவ்வளவு உழைப்பை நாம் போடுவோம். ஆனால், அவர்கள் பூத் கமிட்டியில் கவனம் செலுத்தி ஜெயிக்கிறார்கள்.
இதை நாம் சரி செய்துவிட்டால் நாம் தான் ஆளுங்கட்சி. இதுபோன்ற நிறைய விஷயங்களை நிர்வாகிகளாகிய நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். கட்சிக்காக 200 இளம் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும். வீடுதோறும் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். இன்னும் 5 மாதத்தில் நீங்களெல்லாம் அமைச்சர்களாகப் போகிறீர்கள்” என்று நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.














