வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து கடந்த செவ்வாய்க் கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. அப்போது குவைத் வான்பரப்பில் 3 அமெரிக்க எப்-15 இ ஸ்டிரைக் ஈகிள்ஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இவை குவைத்தின் நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ‘நட்பு நாடுகளுக்கு இடையிலான சம்பவம்’ என கருதப்படும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க தயாரிப்பான எப்/ஏ-18 ஹார்னெட் போர் விமானம் மூலமாகவே அந்த 3 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று இப்போது தெரியவந்துள்ளது.
எப்-18 ஹார்னெட் ஒரு பல்நோக்கு போர் விமானமாகும். பெரும்பாலும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களின் தளங்களில் இருந்து இவை இயக்கப்படுகின்றன. முதல் தலைமுறை எப்-18 முதல் தற்போது வரை பல்வேறு மேம்பட்ட வடிவங்களில் இவை பல பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ள எப்/ஏ என்பது வான்வழித் தாக்குதல் (Fighter) மற்றும் தரைவழித் தாக்குதல் (Attack) ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டது என்பதைக் குறிக்கிறது.
எப்-18 ஹார்னெட் விமானங்கள், 1986-ல் வெளியான ‘டாப் கன்’ திரைப்படத்தில் புகழ்பெற்ற அமெரிக்க கடற்படையின் எப்-14 டாம்கேட் விமானங்களைப் பின்தொடர்ந்து வந்தவை ஆகும். 2022ல் வெளியான ‘டாப் கன்-2′ திரைப் படத்தில் எப்-18 சூப்பர் ஹார்னெட்ஸ் இடம் பெற்றிருந்தன.
தற்செயலாக, முதல் பாகத்தில் முக்கிய பங்கு வகித்த விமானங்களுக்கு மாற்றாக வந்த அதே விமானங்கள் தான் இரண்டாம் பாகத்திலும் பயன்படுத்தப்பட்டன. போயிங் நிறுவனம், எப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட் விமானத்தை, விமானம் தாங்கி கப்பல் பிரிவுகளின் முதுகெலும்பாகக் கருதுகிறது.














