காவிரி விவகாரத்தை அரசியல்ரீதியாக பார்க்கக்கூடாது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியுள்ளார். சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடத்தப்படும் படகு குழாம்கள், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறு உணவுகள், தின்பண்டங்கள் கிடைக்க செய்யும் வகையில் “குயிக் பைட்ஸ்” என்ற சிற்றுண்டி துரித உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக டீ, காபி, கேக் வகைகள், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் உள்ளிட்ட சிற்றுண்டிகள் விற்பனை செய்யும் வகையில் குயிக் பைட்ஸ் சிற்றுண்டி துரித உணவகத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சுற்றுலா வளர்ச்சிக்கழக பொது மேலாளர் லட்சுமி பிரியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ராஜேஷ்குமார் பேசியதாவது: புதிதாக திறக்கப்பட்டுள்ள சிற்றுண்டியில் குறைந்த விலையில் உணவுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
கடந்த 2 வருடமாக சுற்றுலாத்துறை மூலமாக திருப்பதிக்கு ஆன்மீக பயணம் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளோம்.
முதல்வரும் ஆந்திர அரசிடம் பேசி மீண்டும் ஆன்மீக சுற்றுலாப் பயணத்திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
அதன் காரணமாகத்தான் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கும் ஆதரவை அளித்தோம். காவிரி விவகாரத்தை அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்தால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். மேகேதாட்டுவில் அணை கட்ட விடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
