மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கு ஊழியர்களின் மருத்துவச் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு கோரும் விண்ணப்பதாரர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளை பரிசீலிக்கும்போது, வாரிய சேவை விதி எண் 84-ன் கீழ் பரிந்துரை செய்யப்பட்ட படிவத்திலேயே, ஊழியரின் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், 55 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களுக்கு வயது முதிர்வு, இயற்கை உடல்நலக் குறைவு போன்ற பொதுவான காரணங்களைக் குறிப்பிட்டு வழங்கப்படும் மருத்துவச் சான்றிதழ்கள் ஏற்கப்படாது.
இந்த செயல்முறைகளில் தாமதம் ஏற்படுவதை தவிர்த்து, மாநிலம் முழுவதும் ஒரேமாதிரியான சீரான நடைமுறையைப் பின்பற்ற பிரத்யேக சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் அனைத்து ஆவணங்களும் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஆட்சேபம் இல்லாச் சான்றிதழ் மற்றும் உறுதிமொழிப் படிவங்கள் ஆகியவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் விண்ணப்பதாரர் கட்டாயம் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்.
18 வயது நிறைவடையாத வாரிசுதாரர்களுக்கு தனியாக ஒரு சிறப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும். அதில் ஊழியரின் விவரங்கள், பிறந்த தேதி, விண்ணப்பித்த தேதி, வாரிசுதாரர் 18 வயதை அடையும் நாள் போன்ற விவரங்களை துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும். இந்த புதிய நடைமுறைகளை தொய்வின்றி மிகத் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
