தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு நாள்தோறும் பூஜையும், அன்னதானமும் செய்யப்படுகிறது. இந்நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படவுள்ளது.
இதற்கான குருபூஜையில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முதல் தவெக தலைவர் விஜய் வரையிலான அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தேமுதிக தலைமை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து, இன்றைய தினம் நடைபெறவுள்ள குருபூஜையில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கிடையே, கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் இருந்து விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெறுகிறது. தொடர்ந்து நினைவிடத்தில் பூஜைகள் நடைபெற்று, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படவிருக்கிறது.














